உலகம்
தந்தையால் சிறைவைக்கப்பட்ட துபாய் ஆட்சியாளரின் மகள்? ஆதாரங்களை கேட்கும் பிரிட்டன்.. என்ன நடக்கிறது?


துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகள் ஷீகா லத்திஃபா தான் பணயக்கைதியாக அடைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் தன்னுடைய பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை குறித்து கவலையாக உள்ளது என்றும் கூறியிருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஷீகா லத்திஃபா சுதந்திரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக துபாயில் இருந்து தப்பி சென்றதாக சொல்லப்பட்டது. லத்திஃபாவும் அவருடைய தோழியும் தப்பித்து சென்றபொழுது அவர்கள் சென்ற கப்பல் இந்திய கடல்பகுதியில் வைத்து சிக்கியதாகவும் அதை தொடர்ந்து அவருடைய தந்தையின் ஆட்கள் லத்திஃபாவை மீண்டும் துபாய்க்கு கொண்டு சென்றனர் என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
இது லத்திஃபா தப்பிக்க முயற்சி செய்வது இரண்டாவது முறையாகும். அப்போது லத்திஃபாவை ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைக்க இந்திய அரசாங்கம் அதற்கு கைமாறாக கிறிஸ்டியன் மிஷேலை தங்களிடம் ஒப்படைக்க கோரியதாக ஒரு தகவல் வெளியானதும் தனிக்கதை.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் ஷேக் முகமது, ஜோர்டான் நாட்டு இளவரிசியான ஹேயா பின் அல் ஹுசைனை ஆறாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டார். ஹேயாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகளான ஷம்சா அல் மக்தூம் ஏற்கனவே ஒருமுறை தப்பிக்க முயற்சி செய்து பின்னர் தன்னுடைய தந்தையின் ஆட்களிடம் சிக்கி அதன் பின்னர் அவர் வெளியுலகிற்கு கட்டப்படாமலேயே இருந்து வருகிறார்.
Also Read: இனி இந்தியா வராமலே புதுப்பிக்கலாம்.. அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு வந்த நற்செய்தி
அதை தொடர்ந்து தான் இரண்டாவது மகளான லதீஃபா இரண்டு முறை தப்பிக்க முயன்று தோல்வியை சந்தித்துள்ளார். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தான் உலகம் முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. அதன்படி, தன்னுடைய குடும்பத்தினர் அதிகமாக சித்திரவதைகளுக்கு உள்ளாவதாகவும், வெளிநாடுகளில் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வாழ்வதால் சுதந்திரமான வாழ்க்கையை வாழவே தப்பித்து சென்றதாக லதீஃபா கூறியதாக தகவல் வெளியானது.
ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு வட்டாரங்கள் இதை மறுத்துள்ளன. மேலும் அந்த சமயங்களில் லதீஃபா விவகாரம் குறித்து விசாரிக்க நேரில் சென்ற முன்னாள் ஐ.நா மனித உரிமை செயலாளர் மேரி ராபின்சன், லதீஃபாவை நல்ல முறையில் நடத்தப்படுவதாகவும், அவர் குழப்பமான மனநிலையில் இருப்பதால் அதற்கான மருத்துவங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார். இதுவும் கூட சர்ச்சையை ஏற்படுத்தியது.
வீடியோ ஆதாரம்
இதற்கிடையே அந்த நிகழ்வுக்கு பிறகு லதீஃபாவை வேறு எந்த பொது நிகழ்விலும் யாரும் பார்க்கவும் இல்லை. இதுதொடர்பாக புலனாய்வு செய்து தற்போது புதிய வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது பிபிசி. அதில் லதீஃபா ஒரு குளியலறையின் மூலையில் ஒளிந்துகொண்டு பேசுகிறார்.
நான் ஒரு பணயக்கைதியாக இங்கே இருக்கிறேன், இந்த வீடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது என்றும் லதீஃபா அந்த செல்போன் வீடியோவில் பேசுகிறார். வீட்டிற்கு வெளியே ஐந்து ஆண் காவலர்களும், வீட்டிற்கு உள்ளே இரண்டு பெண் காவலர்களும் உள்ளனர். ஒவ்வொரு நாளும் எனது பாதுகாப்பு மற்றும் எனது வாழ்க்கை குறித்து கவலையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு வீடியோவில் எனது நிலைமை ஒவ்வொரு நாளும் மிகவும் அவநம்பிக்கையாகவே இருக்கிறது. இந்த சிறை வீட்டில் நான் பணயக்கைதியாக இருக்க விரும்பவில்லை. சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன் என்றும் லதீஃபா கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது லதீஃபா நண்பர்கள் மூலம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் துபாய் அரசு வட்டாரங்கள் இதுதொடர்பாக கருத்து கூற மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இதற்கிடையே லதீஃபா உயிருடனும், நல்ல நிலையில் இருப்பதற்கான சரியான ஆதாரங்களை பார்க்க விரும்புவதாக பிரிட்டன் கூறியுள்ளது. ஏனெனில் லதீஃபாவின் தாயும், பிரதமர் ஷேக் முகமதுவின் முன்னாள் மனைவியுமான ஹேயா கடந்த 2019 ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பித்து லண்டன் சென்று தன்னுடைய சிறுவயது குழந்தைகளை சவூதி மன்னர் குடும்பத்தினருக்கு திருமணம் செய்து வைக்க முயல்வதாகவும் அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கூறி லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும் லதீஃபாவின் சகோதரி லண்டனில் வைத்து கடத்தப்பட்டதால் இந்த விவகாரத்தில் பிரிட்டன் அதிகளவில் தொடர்புடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம்
பள்ளிக்குள் புகுந்த பயங்கரவாதிகள்: 315 மாணவிகளை கடத்தியதால் பெரும் பரபரப்பு!


பள்ளிக்குள் புகுந்து 317 மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்தியதால், நைஜீரிய நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நைஜீரிய நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அரசு கல்லூரி ஒன்றில் திடீரென புகுந்த பயங்கரவாதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட 42 பேரை கடத்திச் சென்றனர். இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னும் கடத்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களை கண்டுபிடிக்க முடியாமல் நைஜீரிய போலீஸ் திணறி வருகிறது.
இந்த நிலையில் தற்போது மேலும் 312 மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பள்ளி நடந்து கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அந்த பள்ளியில் படித்துக்கொண்டிருந்த 317 பெண் குழந்தைகளை கடத்தி சென்றதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பள்ளிக்கு அருகில் இருந்த ராணுவ முகாம் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்த தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடத்தப்பட்ட பெண் குழந்தைகளை மீட்க நைஜீரிய நாட்டின் போலீசார் மற்றும் ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாகவும் விரைவில் கடத்தப்பட்ட பெண் குழந்தைகள் மீட்க படுவார்கள் என்றும் அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.
உலகம்
உலக போரை விட அதிகமான உயிரிழப்பு.. அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாகிய புதிய ஆய்வு முடிவுகள்!


நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை 3 போர்களின் போது அமெரிக்காவில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகம் என்பது அதிர்ச்சியளிக்க கூடிய செய்தியாக உள்ளது.
2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஒரு மர்ம வைரஸ் பரவி வருவதாக செய்தி வெளியான போது உலகின் ராஜாவாக இருக்கும் அமெரிக்கா தான் மோசமாக பாதிக்கப்பட உள்ளதை நிச்சயம் அறிந்திருக்காது. உலகிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் தான் அதிகம். அதேபோல உயிரிழப்பும் அங்கு மிக அதிக அளவில் உள்ளது.
அங்கு இதுவரை 28 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இரண்டாம் உலக போரின் போதே அமெரிக்காவில் 405,000 பேர் தான் உயிரிழந்தனர், மற்றும் வியட்நாம் போரின் போது 58,000 பேரும், கொரிய போரின் போது 36,000 பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கைகளை விட கொரோனாவில் ஏற்பட்ட உயிரிழப்பு அதிகமாகவே உள்ளது. இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.
இந்த எண்ணிக்கை என்பது உலகம் முழுவதிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 20 சதவிகிதத்தை கொண்டுள்ளது. உலகம் முழுவதிலும் 25 லட்சம் பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
வேகமாக உயர்ந்த உயிரிழப்பு:
2020 ஜனவரி இறுதியில் அமெரிக்காவுக்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கியிருந்தாலும் பிப்ரவரியில் தான் முதல் உயிரிழப்பு ஏற்பட்டது. அடுத்து 4 மாதங்களுக்கு பிறகு ஜூன் மாதத்தில் தான் உயிரிழப்புகள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது. ஆனால் அதன் பின்னர் செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. பின்னர் டிசம்பரில் 3 லட்சமாக உயர்ந்த எண்ணிக்கை அடுத்த ஒரு மாதத்திலேயே 4 லட்சமாக அதிகரித்துள்ளது. ஐந்து லட்சமாக உயரவும் அடுத்த ஒரு மாத காலம் மட்டுமே எடுத்துக்கொண்டது.
Also Read: இந்தியாவில் புதிய ‘உருமாறிய கொரோனாவால்’ 7,000 பேர் பாதிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்!
இப்படி மிக வேகமாக அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள் கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. ஜனவரியில் ஒரு நாளைக்கு சராசரியாக 4000 என்கிற அளவில் இருந்த உயிரிழப்புகள் இப்போது 1900 ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை கூறிய காரணம் அமெரிக்காவில் அதிக அளவிலான தடுப்பூசிகள் போடுவது கிடையாது, மாறாக மக்கள் குளிர் காரணமாக வீடுகளிலேயே தங்கியிருப்பதும், முக கவசங்களை முறையாக அணிவதால் தான் என்கின்றனர் நிபுணர்கள்.
இருப்பினும் மாற்றமடையும் புதிய வகை கொரோனா வைரஸ்கள் இந்த எண்ணிக்கையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பனி, மற்றும் வானிலை தொடர்பான மின் தடைகள் காரணமாக சில பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் தெற்கு பகுதிக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதும் தடைபட்டுள்ளது.
இதுவரை 44 மில்லியன் அமெரிக்கர்கள் குறைந்த பட்சம் தங்களது முதல் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். கடந்த ஏழு நாட்களில் எடுக்கப்பட்ட தரவுகளின் படி ஒரு நாளைக்கு கூறிவந்த பட்சம் 1.6 மில்லியன் அமெரிக்கர்கள் கொரோனா தடுப்பூசிகளை பெறுகின்றனர்.
இதுவரை ஃபைசர் மற்றும் மாடெர்னா நிறுவனங்களின் தடுப்பூசிகளை அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இவற்றுடன் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டால் தடுப்பூசி வழங்கும் அளவு கணிசமாக உயரும் என்றும் ஜூன் இறுதிக்குள் 100 மில்லியன் தடுப்பூசி வழங்கப்பட்ட அளவை எட்ட வேண்டும் என்கிற அமெரிக்க அரசின் இலக்கை அடைய முடியும் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உலகம்
வேற வழியே இல்லை.. கடைசியில் இந்தியாவிடமே உதவியை கேட்ட இலங்கை.. ஆதரவு கிடைக்குமா?


கொழும்பு: அடுத்த வாரம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, இலங்கையில் 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் சமயத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் அதில் அரசின் பொறுப்புகள் குறித்து விசாரிக்கப்பட உள்ள நிலையில் இதில் இந்தியாவின் உதவியை இலங்கை நாடியுள்ளது.
சமீப காலங்களில் இந்தியா – இலங்கை இடையேயான உறவு அவ்வளவு சுமூகமானதாக இல்லை. சீனாவின் கை அங்கு ஓங்கி வருவதால் இந்தியாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ராஜபக்சே சகோதரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக இவர்கள் நடந்து கொண்டனர்.
பின்னர், இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் கச்சத்தீவு பகுதிகளில் மிகப்பெரிய காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கினர். இந்தியாவின் கேந்திர பாதுகாப்புக்கு இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என தெரிந்தும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து, திருகோணமலையில் இந்தியா வசம் இருந்த எரிபொருள் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளையும் இப்போது இலங்கை திரும்பப் பெறுகிறது .
Also Read: எச்-1 பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. பைடன் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு!
இப்படி இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் உரசல் நீடித்துவரும் நிலையில் தான் அடுத்தவாரம் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் நடக்கும் விசாரணையில் இந்தியாவின் ஆதரவை இலங்கை கோரியுள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த இலங்கை வெளியுறவு அமைச்சக நிரந்தர செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் இதனை தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் இலங்கை ஆதரவுக்காக திரும்பிய முதல் நாடு இந்தியா. மாண்புமிகு இந்தியப் பிரதமரின் உதவியைக் கோரி நாங்கள் ஒரு சிறப்பு அறிக்கையை அனுப்பியுள்ளோம். பிராந்திய ஒற்றுமைக்காக இந்தியா இலங்கையை ஆதரிக்கும் என்றும் கொலம்பேஜ் உறுதிபட தெரிவித்தார்.
சில வலிமை வாய்ந்த நாடுகளின் தேவையற்ற தலையீடு இது. எங்கள் நாடு இப்போது அமைதியான ஜனநாயக தேசமாக இருக்கும்போது, முடிந்து போன போரின் காலத்தை பற்றி இன்னும் பேசிக்கொண்டு இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க அடுத்தவாரம் நடைபெறும் அமர்வில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என ஐநா மனித உரிமைகள் அமைப்பின் மைய குழு ஒரு அறிக்கையில் கூறியிருந்ததையடுத்து இப்போது இலங்கை ஆதரவை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்தியாவை தவிர்த்து ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவையும் இலங்கை நாடியுள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் இந்தியா என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது உறுதியாகவில்லை. ஒருபக்கம் இந்தியாவுக்கு எதிரான வேளைகளில் ஈடுபட்டு மறுபக்கம் இந்தியாவின் ஆதரவை கோரும் இலங்கையின் முடிவுக்கு இந்தியா என்ன பதில் கொடுக்கும் என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரும்.