தமிழ்நாடு
பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனை கொன்ற வீரமங்கை – விடுதலை செய்து போலீஸ் அதிரடி!


சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார் இளம் பெண் ஒருவர். இதை கொலை வழக்காக கருதாமல், தற்காப்புக்காகவே இளம் பெண் கொலை செய்துள்ளார் என்று கருதி, அவரை விடுதலை செய்து தமிழக காவல் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தில் உள்ள அல்லிமேடு பகுதியில் வசித்து வருகிறார் இளம் பெண் கவுதமி. தாய் மற்றும் தந்தையை இழந்த கவுதமி, உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். அவர் சம்பவ நாளன்று இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக, ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் இடத்துக்கு ஒதுங்கியுள்ளார். அப்போது குடி போதையில் இருந்த அஜித் என்பவர், கவுதமியை பின் தொடர்ந்து வந்துள்ளார்.
போதையில் இருந்த அஜித், கவுதமியின் உறவினர் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் கவுதமிக்கு அருகில் கத்தியுடன் வந்துள்ளார் அஜித். கத்தி முனையில் கவுதமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றுள்ளார் அஜித். அவரிடமிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று கவுதமி முயன்றுள்ளார். ஒரு கட்டத்தில் அஜித்தின் கையிலிருந்த கத்தியைப் பிடிங்கி, அவரையே தற்காப்புக்காக குத்தியுள்ளார் கவுதமி. குடி போதையிலிருந்த அஜித், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் அஜித் விழுந்து கிடக்க, அங்கிருந்து தப்பித்துள்ளார் கவுதமி.
இதையடுத்து, அருகில் இருக்கும் சோழவரம் காவல் நிலையத்துக்கு கத்தியுடன் சென்று சரணடைந்துள்ளார் கவுதமி. முதலில் இதை கொலை வழக்காக கருதி, ஐபிசி பிரிவு 302க்கு கீழ் வழக்குப் பதிவு செய்தது காவல் துறை. ஆனால், இந்த விஷயம் திருவள்ளூர் மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அவர் கவுதமியிடம் சம்பவம் குறித்து தீர விசாரித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கவுதமி தற்காப்புக்காத்தான் அஜித்தைக் குத்திக் கொன்றுள்ளார் என்பதை புரிந்து கொண்டார். மேலும், 302 செக்ஷனிலிருந்து, தற்காப்புக்காக கொலை செய்தால் பதிவு செய்யப்படும் ஐபிசி செக்ஷன் 100-க்கு கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் கவுதமி உடனடியாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
காவல் துறையின் இந்த செயலுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காவல் கண்காணிப்பாளர் அரவிந்துனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பாலியல் துன்புறுத்தல்களால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் சூழலில், தன்னை சீண்டிய நபரை தற்காப்புக்காக குத்திக் கொன்ற கவுதமியின் வீரத்தையும் பலர் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
பெண்கள், பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டால் இப்படித்தான் எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை கவுதமி முன்னுதாரணமாக இருந்து விளக்கி உள்ளார்.
தமிழ்நாடு
நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு: எல்.கே.சுதீஷ் ஃபேஸ்புக் பதிவின் பின்னணி என்ன?


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இந்த முறை அந்த கூட்டணியில் இருக்குமா? என்ற சந்தேகம் கடந்த பல மாதங்களாக இருந்து வந்தது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களாக பாஜக மற்றும் பாமக உடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வந்த அதிமுக, தேமுதிகவை கண்டுகொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று அதிமுக கறாராகச் சொல்லி விட்டதாகவும் இதனால் தேமுதிக அதிர்ச்சியில் இருப்பதாகவும் தெரிகிறது.
பாமகவைவிட குறைந்த தொகுதியை பெற்றால் நாளை கட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்றும் அதனால் 12 தொகுதிக்கு ஒப்புக் கொள்ளக் கூடாது என்றும் தேமுதிக முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் திடீரென எல்.கே.சுதீஷ் தனது ஃபேஸ்புக்கில், ‘நமது முதல்வர் விஜயகாந்த் என்றும் நமது சின்னம் முரசு என்றும் பதிவு செய்துள்ளார். ஆனால் இந்த சலசலப்புக்கள் எல்லாம் அதிமுக எந்தவித பயமுமின்றி தேமுதிக இல்லை என்றாலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது.
தமிழ்நாடு
234 தொகுதிகளின் வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் – நாம் தமிழர் கட்சியின் ‘பலே’ திட்டம்!


தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த முறை திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி இடையே ஆட்சியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட கட்சிகளும் பல தொகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் எனத் தெரிகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய உள்ளது.
இது குறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போது தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இரு பெரும் திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் பணத்தை வாரியிறைத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் சதிச்செயலை அரங்கேற்ற அணியமாகி நிற்கின்றன. இவற்றிற்கு முற்றிலும் நேர்மாறாக, நற்கருத்துகளை மக்களிடையே விதைத்து, அதன்மூலம் மக்களை அரசியல்படுத்தி, அதனூடே வாக்குகளைப் பெற்றுச் சனநாயகத்தை நிலைநிறுத்த போராடிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி, இச்சட்டமன்றத் தேர்தலிலும் வழமைபோல மக்களையும், மகத்தான தத்துவத்தையும் நம்பி, தனித்தே களமிறங்குகிறது. ஆணும் பெண்ணும் சமம் என்னும் பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு சரிபாதி 117 தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கி வரலாற்றைப் புரட்டிப்போட காத்திருக்கிறது. எவ்விதப் பின்புலமும் இல்லாத எளிய மனிதர்களால் கட்டப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிற நாம் தமிழர் கட்சி எனும் மக்கள் பாதுகாப்புப் பெரும்படை, எவ்விதத் தத்துவத் தடம்பிறழ்வோ, கொள்கை சறுக்கலோ, அரசியல் சமரசமோ எதுவுமற்று நன்னெறியோடு நேர்மையான பாதையில் வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மண்ணின் மீதும், மக்கள் மீதும் பற்றுறுதி கொண்டு தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு அரசியற்படுத்தப்பட்ட ஒரு இளையோர் கூட்டம் எவ்வித எதிர்பார்ப்புமற்று மாற்று அரசியலுக்காய் நாளும் உழைத்துக் கொண்டிருக்கையில், அதற்குத்தோள்கொடுத்து உதவ வேண்டியதும், ஒரு நல்லரசியல் துளிர்விடத் துணைநிற்க வேண்டியதும் சனநாயகப் பற்றாளர்களின் தலையாயக் கடமையாகும்.
‘பாதையைத் தேடாதே; உருவாக்கு!’ எனும் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது உயரியக் கூற்றுக்கு, உயிரூட்டும் விதத்தில் உலகெங்கும் வேர்பரப்பி வாழுகிற மக்கள் இராணுவமான நாம் தமிழர் கட்சிக்கு மகத்தான ஆதரவினையும், வாக்குகளையும் வழங்கி, அதிகாரத்தில் ஏற்றி வைக்க வேண்டியது ஒவ்வொரு இனமானத் தமிழரின் தார்மீகக் கடமையாகிறது.
வருகிற மார்ச் 07 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 03 மணியளவில் சென்னை, இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடலில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்வித்து, நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை ஆவணமாக வெளியிடவிருக்கிறோம். அந்நிகழ்வில் பெருந்திரளெனக் கூடி, நமது வெற்றியை முரசறிவிக்க வேண்டுமென இனமானத் தமிழர்களை அழைக்கிறோம். தமிழர்களுக்கான அரசை அமைக்கப் பாடுபடும் இப்பெரும்பணியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என யாவருக்கும் அறைகூவல் விடுக்கிறோம்.
‘தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்’ எனும் புரட்சிப்பாவலர் பாரதிதாசன் முன்வைத்த முழக்கத்தை முன்வைத்துக் களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியை அரியணையேற்ற பாடுபடுவோம்!
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
தமிழ்நாடு
திமுக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்: ஒப்பந்தம் கையெழுத்தன பின் கூறிய மமக தலைவர்


பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து செய்தபின் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது
மேலும் மனித நேய மக்கள் கட்சி எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்