தமிழ்நாடு
ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்க முடிவு!


தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் தற்போது ஸ்மார்ட் கார்டு மூலமாக, பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கும் பொது, கார்டை ஸ்கான் செய்தால் மட்டும் போதும் என்பதால் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
மேலும் விரைவில் நாடு முழுவதும் ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வருகிறது. அப்போது ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ரேஷன் கார்டை ஸ்கான் செய்த பிறகு அட்டைக்கு சொந்தமான ஒருவரின் கைரேகை வைத்த பிறகு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்ற முறை அறிமுகம் தமிழகத்தில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாகத் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மட்டும் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்தால் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும் ரேஷன் பொருட்கள் வாங்கும் போது பயோமெட்ரிக் முறை கட்டாயமாக்கப்படும்.
ரேஷன் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் கட்டாயமாக்கப்பட்டால், ரேஷன் கார்டுகளை அடகு வைக்கும் முறையும் குறையும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு
சசிகலா ரீ-என்ட்ரிக்கு end card போட்ட எடப்பாடி பழனிசாமி… இப்படி சொல்லிப்புட்டாரே!!!


இன்னும் ஒரு சில நாட்களில் சசிகலா சிறையிலிருந்து வெளியே வரப் போகிறார். அவர் வெளியே வந்ததும் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவில் சலசலப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இருக்கும் சில நிர்வாகிகள், சசிகலாவுக்கு ஆதரவாகவே தொடர்ந்து கருத்து சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் அவர் மீண்டும் அதிமுகவில் கம்-பேக் கொடுப்பாரா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியே வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவுக்குத் தலைமை ஏற்ற சசிகலா, அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஆனார். தொடர்ந்து தமிழக முதல்வராக பதவியேற்க திட்டம் போட்டார் சசிகலா. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறைத் தண்டனை முடிந்து வெளியே வர இருக்கிறார் சசிகலா.
இது குறித்துப் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடியார், ‘சசிகலா, மீண்டும் அதிமுகவில் இணைய 100 சதவீதம் வாய்ப்பு என்பதே கிடையாது. அவர் கட்சியிலேயே இல்லை. அதைப் போல தினகரனும் அதிமுகவில் இல்லை. அதிமுக என்பது பெரிய இயக்கம். இதில் பலர் வரலாம், போகலாம். ஆனால், கட்சி இருக்கும்.
தினகரனை, ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். அவர் உயிருடன் இருக்கும் வரை தினகரனை அதிமுகவில் சேர்க்கவே இல்லை’ என்று பேசியுள்ளார்.
தமிழ்நாடு
ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது யாருக்காவது தெரியுமா? ஸ்டாலின் கேள்வி


ஜெயலலிதாவின் மரணம் குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை என்று திமுக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சேலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், ‘ஜெயலலிதாவுக்கும் திமுகவுக்கும் கருத்து வேறுபாடு தான் இருந்தது. அண்ணா புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து செய்திகள் வெளியிடப்பட்டன. அவர் எப்படி இறந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இதே போல் எம்ஜிஆருடைய மரணமும் அனைவருக்குமே தெரியும்.
ஆனால், ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. சும்மா இட்லி சாப்பிட்டார்கள், டிவி பார்த்தார்கள் என்று தான் சொல்லி வருகிறார்கள். சாதாரணமாக ஒரு துக்க வீட்டிற்கு சென்றாலே, இறந்தவர் எப்படி இறந்தார், என்ன ஆச்சு என்று கேட்கிறோம்.
ஒரு சாமானியரின் மரணமே நாம் தெரிந்துகொள்கிறோம். உற்றார் உறவினர்களும் சொல்லி விடுகிறார்கள். ஆனால், ஒரு மாநிலத்திற்கே முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது’ இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு
பொங்கல் பரிசு எல்லோருக்கும் கிடைத்ததற்கு நான் தான் காரணம்: செல்லூர் ராஜூ அடம்


பொங்கல் பரிசு அனைவருக்கும் கிடைத்ததற்கு எம்ஜிஆரின் பக்தன் இந்த செல்லூர் ராஜூ தான் காரணம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமையாக பேசியுள்ளார்.
மதுரையில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘எம்ஜிஆர் பணத்திற்காக எந்த கதாபாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார். நடித்த எல்லா படங்களிலும் அண்ணாவின் கொள்கையை நிலைநாட்டியவர் எம்ஜிஆர்.
ஆனால் இப்போது எல்லாம் வெறும் 4 நாள் படம் ஓடினாலே போதும். தலைவா நீ தான் முதல்வர் என்று போஸ்டர் ஒட்டி விடுகின்றனர். திமுகவை வளர்த்துவிட்டவர் அண்ணா தான். ஆனால், திமுக பேனர், விளம்பரத்தில் அண்ணா படமே இருக்காது. முழுக்க கருணாநிதியின் குடும்ப படமே உள்ளது.
மதுரை சிறப்பாக வர வேண்டும் என்று எந்நாளும் நினைத்துக்கொண்டிருப்பவன் நான். பொங்கல் பரிசு மக்கள் அனைவருக்கும் கிடைத்ததற்கு எம்ஜிஆரின் பக்தன் இந்த செல்லூர் ராஜூ தான் காரணம்’.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.