தமிழ்நாடு
தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு… மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னை!


தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி உடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்த வரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகருக்குள்ளும் புறநகர்ப் பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உண்டு. குமரிக்கடல் பகுதியில் பலமான காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு
அதிமுக விருப்பமனு தேதி திடீர் மாற்றம்!


தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், விருப்பமான பெறுதல், நேர்காணல், தேர்தல் பிரச்சாரம் செய்தல் ஆகியவற்றை கிட்டதட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிமுகவில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை மார்ச் 5ஆம் தேதி வரை தரலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது போதிய அவகாசம் இல்லாததால் அந்த தேதி மார்ச் 3ஆம் தேதி என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
கூட்டணி முடிவாகும் முன்பே நேர்காணலை தொடங்கும் தேமுதிக: என்ன திட்டம்?


கூட்டணி முடிவாகும் முன்னே நேர்காணலை தொடங்க இருப்பதாக தேமுதிக அறிவித்துள்ளதால் என்ன திட்டம் வைத்திருக்கிறது அக்கட்சி என்ற ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக இன்று கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தது. ஆனால் அதிமுக தரப்பில் இருந்து 12 தொகுதிகள் மட்டுமே தருவதாக கூறப்பட்டதால் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் இருந்ததால் அந்தப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் நாளை பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை முடிவு செய்யும் முன்பே தற்போது நேர்காணலை தொடங்க இருப்பதாக தேமுதிக அறிவித்துள்ளது. சமீபத்தில் தேமுதிக விருப்ப மனுக்கள் பெற்ற நிலையில் மார்ச் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பு செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுகிறதா? அல்லது வேறு கூட்டணிக்கு செல்கிறதா? என்ன திட்டம் என்பது புரியாமல் அரசியல் கட்சி தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு
சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட துணை ஜனாதிபதி!


கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர் தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் எந்தவித பயமும் தேவையில்லை என்றும் அவர் அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் பிரதமரை அடுத்து சற்று முன்னர் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் சென்னையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் துணை குடியரசுத்தலைவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பதும், இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடதக்கது.