தமிழ்நாடு
கடனை திருப்பி செலுத்தாததால் வீட்டை பூட்டிய வங்கி: ஒருவாரமாக தவிக்கும் விவசாயி குடும்பம்!


ஒருபக்கம் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் விவசாயி ஒருவர் வாங்கிய கடனை செலுத்தவில்லை என்பதற்காக அவருடைய வீட்டை பூட்டி சீல் வைத்த பேங்க் நிர்வாகத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உடல்நிலை பிரச்சினை மற்றும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயி ஒருவர் தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் பலமுறை கடனை செலுத்த கூறிய வங்கி நிர்வாகம் திடீரென கடந்த வாரம் அவருடைய வீட்டை பூட்டி சீல் வைத்தது. இதனையடுத்து தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் பூட்டிய வீட்டின் முன் அந்த விவசாயி ஒரு வாரமாக உட்கார்ந்து இருக்கிறாராம்.
விவசாயி மகள்களின் படிப்பை கணக்கில் கொண்டாவது வங்கி நிர்வாக மனிதாபிமானத்துடன் நடந்து இருக்கலாம் என்றும் உடைமாற்ற கூட முடியாத அளவுக்கு வீட்டை பூட்டி சீல் வைத்த தனியார் வங்கி நிர்வாகத்திற்கு நெட்டிசன்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு
234 தொகுதிகளின் வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் – நாம் தமிழர் கட்சியின் ‘பலே’ திட்டம்!


தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த முறை திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி இடையே ஆட்சியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட கட்சிகளும் பல தொகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் எனத் தெரிகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய உள்ளது.
இது குறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போது தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இரு பெரும் திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் பணத்தை வாரியிறைத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் சதிச்செயலை அரங்கேற்ற அணியமாகி நிற்கின்றன. இவற்றிற்கு முற்றிலும் நேர்மாறாக, நற்கருத்துகளை மக்களிடையே விதைத்து, அதன்மூலம் மக்களை அரசியல்படுத்தி, அதனூடே வாக்குகளைப் பெற்றுச் சனநாயகத்தை நிலைநிறுத்த போராடிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி, இச்சட்டமன்றத் தேர்தலிலும் வழமைபோல மக்களையும், மகத்தான தத்துவத்தையும் நம்பி, தனித்தே களமிறங்குகிறது. ஆணும் பெண்ணும் சமம் என்னும் பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு சரிபாதி 117 தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கி வரலாற்றைப் புரட்டிப்போட காத்திருக்கிறது. எவ்விதப் பின்புலமும் இல்லாத எளிய மனிதர்களால் கட்டப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிற நாம் தமிழர் கட்சி எனும் மக்கள் பாதுகாப்புப் பெரும்படை, எவ்விதத் தத்துவத் தடம்பிறழ்வோ, கொள்கை சறுக்கலோ, அரசியல் சமரசமோ எதுவுமற்று நன்னெறியோடு நேர்மையான பாதையில் வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மண்ணின் மீதும், மக்கள் மீதும் பற்றுறுதி கொண்டு தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு அரசியற்படுத்தப்பட்ட ஒரு இளையோர் கூட்டம் எவ்வித எதிர்பார்ப்புமற்று மாற்று அரசியலுக்காய் நாளும் உழைத்துக் கொண்டிருக்கையில், அதற்குத்தோள்கொடுத்து உதவ வேண்டியதும், ஒரு நல்லரசியல் துளிர்விடத் துணைநிற்க வேண்டியதும் சனநாயகப் பற்றாளர்களின் தலையாயக் கடமையாகும்.
‘பாதையைத் தேடாதே; உருவாக்கு!’ எனும் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது உயரியக் கூற்றுக்கு, உயிரூட்டும் விதத்தில் உலகெங்கும் வேர்பரப்பி வாழுகிற மக்கள் இராணுவமான நாம் தமிழர் கட்சிக்கு மகத்தான ஆதரவினையும், வாக்குகளையும் வழங்கி, அதிகாரத்தில் ஏற்றி வைக்க வேண்டியது ஒவ்வொரு இனமானத் தமிழரின் தார்மீகக் கடமையாகிறது.
வருகிற மார்ச் 07 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 03 மணியளவில் சென்னை, இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடலில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்வித்து, நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை ஆவணமாக வெளியிடவிருக்கிறோம். அந்நிகழ்வில் பெருந்திரளெனக் கூடி, நமது வெற்றியை முரசறிவிக்க வேண்டுமென இனமானத் தமிழர்களை அழைக்கிறோம். தமிழர்களுக்கான அரசை அமைக்கப் பாடுபடும் இப்பெரும்பணியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என யாவருக்கும் அறைகூவல் விடுக்கிறோம்.
‘தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்’ எனும் புரட்சிப்பாவலர் பாரதிதாசன் முன்வைத்த முழக்கத்தை முன்வைத்துக் களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியை அரியணையேற்ற பாடுபடுவோம்!
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
தமிழ்நாடு
திமுக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்: ஒப்பந்தம் கையெழுத்தன பின் கூறிய மமக தலைவர்


பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து செய்தபின் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது
மேலும் மனித நேய மக்கள் கட்சி எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு
திமுக கூட்டணியில் முஸ்லீம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? ஒப்பந்தம் கையெழுத்து!


தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
இந்தநிலையில் சற்றுமுன் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் கையெழுத்திட்டனர்
வைகோவின் மதிமுக கட்சிக்கு அதிகபட்சம் 5 அல்லது 7 தொகுதிகள் மட்டுமே தருவதாக திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்து வருகிறது.