தமிழ்நாடு
சசிகலா ஒரு சாக்கடையா..!?- சர்ச்சையாக பேசி பற்றவைத்த குருமூர்த்தி


துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, சசிகலாவை சாக்கடையோடு ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இன்று மாலை சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் துக்ளக் இதழின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்றார். அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தானும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பல விஷயங்களைப் பேசினார் குருமூர்த்தி. ஒரு கட்டத்தில் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க அதிமுக, சசிகலாவை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்போது சசிகலாவை சாக்கடையோடு ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
குருமூர்த்தி, நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராகவும், அரசியல் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார். பலரும் ரஜினி, அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து 2017 ஆம் ஆண்டு முதலே சந்தேகம் எழுப்பி வந்த நிலையில், அவர் நிச்சயம் கட்சித் தொடங்குவார் என்று கூறி வந்தவர் குருமூர்த்தி. தற்போது உடல்நிலை காரணமாக அரசியல் கட்சித் தொடங்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்து விட்டார் ரஜினி. இந்த நிலையிலும், அவரை அரசியலுக்கு இழுக்கும் வகையில், ‘1996 ஆம் ஆண்டைப் போலவே, இப்போதும் வாய்ஸ் கொடுத்து, தன் அரசியல் ஆதரவு நிலைப்பாட்டை ரஜினி எடுப்பார்’ என்று தூண்டி விட்டுள்ளார் குருமூர்த்தி. ரஜினி, எப்படியும் இனி அரசியல் குறித்து பேச வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.
ரஜினி, அரசியலுக்கு வரும் பட்சத்தில் அது திமுகவுக்கு மிகப் பெரும் பின்னடைவாக இருக்கும் என்று பார்க்கப்பட்டது. குறிப்பாக இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று சொல்லப்படும் நிலையில், அதைத் தடுக்க ரஜினி என்கிற ஆஸ்திரம் தான் பயன்படும் என்று குருமூர்த்தி கணித்திருந்தார். அதன்கு தன்னால் ஆன அனைத்துக் காரியங்களையும் குருமூர்த்தி செய்து வந்தார். ஆனால், கடைசி நேரத்தில் குருமூர்த்தியின் அனைத்து சாணக்கிய கணக்குகளையும் தவிடு பொடியாக்கினார் ரஜினி.
இப்படியான சூழலில், திமுகவுக்கு எதிரான வலுவான கூட்டணி அமைந்திட வேண்டும் என்னும் நோக்கில் குருமூர்த்தி, ‘வீடு பற்றியெரியும் போது, கங்கை ஜலம் தான் வேண்டும் என்று காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலம் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தி நெருப்பை அணைக்க வேண்டும். அதைப் போல அதிமுக, சசிகலாவை இணைத்துக் கொண்டால் தான் வெற்றி பெற முடியும் என்கிற நிலையில் இருந்தால், அதை செய்யவும் தயங்கக் கூடாது’ என்று துக்ளக் விழாவில் பேசியுள்ளார். சசிகலாவை அவர் வெளிப்படையாகவே சாக்கடை என்று கூறியுள்ளார். இதனால் அமமுகவினர் பெரும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். இன்னும் சிலரோ, ‘இவர் ரஜினியையே சாக்கடை ஜலமாகத் தான் எண்ணியிருப்பார்’ என்றும் விமர்சனங்களை வைக்கின்றனர்.
இந்தியா
நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி.. தூய்மைப் பணியாளருக்கு போடப்பட்டது!


நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி தூய்மைப் பணியாளருக்குப் போடப்பட்டு மத்திய அரசு கெளரவித்தது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை, தனியார் மருத்துவமனைகள் மூலமாக இந்தத் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தொடங்கி வைத்தார். முதல் நபராக தூய்மை பணியாளருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு, கெளரவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு மாநிலங்கள் வாரியாக தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கின.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தேசத்தை சுகாதாரமாக மாற்ற மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், விரைவில் தானும் போட்டுக்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். சென்னையில் அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு
குருமூர்த்தி தன்னை அதிமேதாவியாக பாவித்துக் கொள்கிறார் -டிடிவி தினகரன்


துக்ளக் ஆசிரியர் தன்னை அதிமேதாவியாக நினைத்துக் கொள்வதாக டிடிவி தினகரன் சாடியுள்ளார்.
அண்மையில் நடந்த துக்ளக் விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி அதிமுக, அமமுக குறித்து பேசினார். அப்போது அவர் சசிகலா மற்றும் அமமுகவை சாக்கடை நீருடன் ஒப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் குருமூர்த்தியைப் பற்றி டுவீட் செய்துள்ளார். அதில், ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.
கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல.
துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது’.
இவ்வாறு டிடிவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
மாஸ்டர் படத்தைத் திரையிட்ட 25 திரையரங்குகள் மீது வழக்கு!


கொரோனா வழிகாட்டுதல்கள் இல்லாமல் மாஸ்டர் படத்தை திரையிட்ட 25 திரையரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலன்று வெளியானது. கொரோனா பரவல் குறைந்த பிறகு, கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகு ரசிகர்கள் கூட்டத்தால் திரையரங்குகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
முன்னதாக திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் அதற்கு அனுமதிக்க மறுத்து, 50% இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், மாஸ்டர் திரைப்படம் வெளியான முதல் நாளில் திரையரங்கில் கொரோனா வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றாமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல், 50% இருக்கைகள் பின்பற்றாமல் செயல்பட்ட 25 திரையரங்குகள் மீது காவல்துறையினர் IPC 188, 269 கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ஒவ்வொரு திரையரங்கிற்கும் 5,000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படுவதாகவும் செய்திகள் வந்துள்ளன.