தமிழ்நாடு
துள்ளி வருகுது நம்ப ஊரு காளை! – அவனியாபுரத்தில் களைகட்டிய ஜல்லிக்கட்டு


தமிழர்த் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரை அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்துப் பெற்றவை. இந்த மூன்றில் எப்போதும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுதான் முதலில், பெரும் பொங்கல் நாளன்று நடத்தப்படும். அதன்படி இன்று காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள், அவனியாபுரத்தில் ஆரம்பித்தன. ஏக கம்பீரத்துடன் துள்ளி வரும் காளைகளை அடக்க, மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை உட்பட அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இன்று காலை, போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்ற பின்னர், விளையாட்டு ஆரம்பமானது. இன்றைய அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 430 மாடுபிடி வீரர்கள், 830 காளைகள் களத்தில் இருக்கின்றன. உடலில் காயங்கள் எதுவும் இல்லாத, நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும் காளைகள் மட்டுமே களத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளன. அதேபோல, மாடுபிடி வீரர்களுக்கும் முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னர் தான் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக, குறைந்த அளவிலான மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே ஒரு சமயத்தில் களத்தில் இறங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் பார்க்க ஏராளமானோர் கூடியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், இன்று அவனியாபுரத்துக்கு வந்து ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிடுவார்.
தமிழ்நாடு
சசிகலா ரீ-என்ட்ரிக்கு end card போட்ட எடப்பாடி பழனிசாமி… இப்படி சொல்லிப்புட்டாரே!!!


இன்னும் ஒரு சில நாட்களில் சசிகலா சிறையிலிருந்து வெளியே வரப் போகிறார். அவர் வெளியே வந்ததும் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவில் சலசலப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இருக்கும் சில நிர்வாகிகள், சசிகலாவுக்கு ஆதரவாகவே தொடர்ந்து கருத்து சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் அவர் மீண்டும் அதிமுகவில் கம்-பேக் கொடுப்பாரா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியே வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவுக்குத் தலைமை ஏற்ற சசிகலா, அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஆனார். தொடர்ந்து தமிழக முதல்வராக பதவியேற்க திட்டம் போட்டார் சசிகலா. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறைத் தண்டனை முடிந்து வெளியே வர இருக்கிறார் சசிகலா.
இது குறித்துப் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடியார், ‘சசிகலா, மீண்டும் அதிமுகவில் இணைய 100 சதவீதம் வாய்ப்பு என்பதே கிடையாது. அவர் கட்சியிலேயே இல்லை. அதைப் போல தினகரனும் அதிமுகவில் இல்லை. அதிமுக என்பது பெரிய இயக்கம். இதில் பலர் வரலாம், போகலாம். ஆனால், கட்சி இருக்கும்.
தினகரனை, ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். அவர் உயிருடன் இருக்கும் வரை தினகரனை அதிமுகவில் சேர்க்கவே இல்லை’ என்று பேசியுள்ளார்.
தமிழ்நாடு
ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது யாருக்காவது தெரியுமா? ஸ்டாலின் கேள்வி


ஜெயலலிதாவின் மரணம் குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை என்று திமுக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சேலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், ‘ஜெயலலிதாவுக்கும் திமுகவுக்கும் கருத்து வேறுபாடு தான் இருந்தது. அண்ணா புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து செய்திகள் வெளியிடப்பட்டன. அவர் எப்படி இறந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இதே போல் எம்ஜிஆருடைய மரணமும் அனைவருக்குமே தெரியும்.
ஆனால், ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. சும்மா இட்லி சாப்பிட்டார்கள், டிவி பார்த்தார்கள் என்று தான் சொல்லி வருகிறார்கள். சாதாரணமாக ஒரு துக்க வீட்டிற்கு சென்றாலே, இறந்தவர் எப்படி இறந்தார், என்ன ஆச்சு என்று கேட்கிறோம்.
ஒரு சாமானியரின் மரணமே நாம் தெரிந்துகொள்கிறோம். உற்றார் உறவினர்களும் சொல்லி விடுகிறார்கள். ஆனால், ஒரு மாநிலத்திற்கே முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது’ இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு
பொங்கல் பரிசு எல்லோருக்கும் கிடைத்ததற்கு நான் தான் காரணம்: செல்லூர் ராஜூ அடம்


பொங்கல் பரிசு அனைவருக்கும் கிடைத்ததற்கு எம்ஜிஆரின் பக்தன் இந்த செல்லூர் ராஜூ தான் காரணம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமையாக பேசியுள்ளார்.
மதுரையில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘எம்ஜிஆர் பணத்திற்காக எந்த கதாபாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார். நடித்த எல்லா படங்களிலும் அண்ணாவின் கொள்கையை நிலைநாட்டியவர் எம்ஜிஆர்.
ஆனால் இப்போது எல்லாம் வெறும் 4 நாள் படம் ஓடினாலே போதும். தலைவா நீ தான் முதல்வர் என்று போஸ்டர் ஒட்டி விடுகின்றனர். திமுகவை வளர்த்துவிட்டவர் அண்ணா தான். ஆனால், திமுக பேனர், விளம்பரத்தில் அண்ணா படமே இருக்காது. முழுக்க கருணாநிதியின் குடும்ப படமே உள்ளது.
மதுரை சிறப்பாக வர வேண்டும் என்று எந்நாளும் நினைத்துக்கொண்டிருப்பவன் நான். பொங்கல் பரிசு மக்கள் அனைவருக்கும் கிடைத்ததற்கு எம்ஜிஆரின் பக்தன் இந்த செல்லூர் ராஜூ தான் காரணம்’.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.