கட்டுரைகள்
என் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா? கோழைத்தனமா?


கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதியின் தற்கொலைப்படை தாக்குதலால் பலியாகினர். இந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் அமைப்பு ஆகும். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக பலத்த கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆனால் இதனைவைத்து பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது, பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதியில்லை போன்ற செயல்பாடுகள் வரவேற்கத்தக்க வகையில் இல்லை.
பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என எழுந்துவரும் கருத்துக்கள் ஆரோக்கியமான கருத்துக்கள் கிடையாது. சமீபத்தில் டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடுதலுக்கான உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொள்ள பாகிஸ்தான் வீரர்கள் ஜி.எம்.பஷீர், கலில் அகமது ஆகியோருக்கு விசா வழங்க இந்தியா மறுத்துவிட்டது. இதனையடுத்து இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள ஒலிம்பிக் அமைப்பு இந்தியாவை கடுமையாக சாடியுள்ளது. வருங்காலத்தில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவது குறித்து இந்தியாவுடன் நடைபெறவிருந்த எல்லா பேச்சுவார்த்தைகளையும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரத்து செய்துள்ளது. மேலும் டெல்லியில் நடைபெறும் போட்டிகளில் ஆண்களுக்கான 5 மீட்டர் ரேபிட் ஃபயர் சுற்றில் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட ஒலிம்பிக் தகுதியையும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திரும்பப் பெற்றுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, இந்திய ஒலிம்பிக் கமிட்டியுடனும், இந்திய அரசு அதிகாரிகளுடனும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கமிட்டியும் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தியது. பெரும் முயற்சி மேற்கொண்டும் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் போட்டியிடுவதற்கு இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. இதனால் பாதிப்பு பாகிஸ்தானுக்கு இல்லை, இந்தியாவுக்கு தான் என்பதை ஏன் இந்தியா உணரவில்லை.
கிரிக்கெட்டிலும் இந்த நிலைதான் உள்ளது, பாகிஸ்தானுடன் இந்தியா வர உள்ள உலகக்கோப்பை போட்டியில் மோதக்கூடாது என பல கருத்துக்கள் நிலவி வருகிறது. இதனால் பாதிப்பு பாகிஸ்தானுக்கு இல்லை. இந்தியாவுக்கு தான். இந்தியா பாகிஸ்தானுடன் மோதவில்லை என்றால் இந்தியா தான் புள்ளிகளை இழக்க நேரிடும். நாக் அவுட் போட்டி என்றால் இந்தியா உலகக் கோப்பையையே இழக்க நேரிடும்.
பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்ப்பதை விட அவர்களுடன் விளையாடி அவர்களை தோற்கடிப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும். 1999-இல் கார்கில் போருக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடி அவர்களை தோற்கடித்தது. அதுபோல இந்த முறையும் இந்தியா பாகிஸ்தானை ஆடுகளத்தில் நேருக்கு நேர் சந்தித்து அவர்களை தோற்கடிக்கவேண்டும். அதில் தான் இந்தியாவின் வீரம் உள்ளது. பாகிஸ்தானுடன் விளையாடாமல் புறக்கணிப்பது என்பது போரிடாமலே தோற்றுப்போவது ஆகும். இது முற்றிலும் கோழைத்தனம். இந்தியா வீரமாக இருக்கவே நாம் அனைவரும் ஆசைப்படுகிறோம், கோழையாக இருப்பதற்கல்ல. தீவிரவாதத்துக்கு தீர்வு காண வேண்டும், தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் அதில் இங்கு யாருக்கும் மற்றுக்கருத்து இல்லை. ஆனால் தீவிரவாதத்துக்கு பதிலடி இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடாமல் இருப்பது அல்ல என்பதே இதன் நோக்கம்.
கட்டுரைகள்
செயல்படுவது முதல் சேமிப்பு வரை.. இந்தியாவில் அனுமதி பெற்ற கோவாக்சின்-கோவிஷீல்டு.. என்ன வித்தியாசம்?
Difference between Covishield and Covaxin. Here all you need to know.


புதுடெல்லி : கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக இந்திய அரசாங்கம் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 5 கட்டங்களாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதல் கட்டத்தில் சுகாதார ஊழியர்கள் முன்கள பணியாளர்கள் உட்பட ஒரு கோடி பேருக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே மத்திய அரசு அனுமதித்தால் கோவிஷீல்டு தடுப்பூசியை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூணவல்லா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்து முறையான பரிசோதனை முடிவுகள் வெளியாகும் முன்பே அதற்கு அனுமதி வழங்கி விட்டதாக சில அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இருப்பினும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் எதை பயன்படுத்தலாம் எதற்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் இந்திய மருந்து நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் எப்படி செயல்படுகிறது என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி தான் இந்தியாவில் கோவாக்சின் என அழைக்கப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதிலும் இது AZD1222 என்கிற பெயரில் அறியப்படுகிறது. சிம்பன்சி வகை குரங்குகளில் காணப்படும் அடினோ வைரஸ் என்கிற வகை வைரஸை ஜெனிடிக் முறைப்படி மட்டுப்படுத்தி அதற்குள் கொரோனா வைரஸின் சிதைக்கப்பட்ட மரபணுவை செலுத்துவார்கள். இதனால் இந்த அடினோ வைரஸ் கொரோனா வைரஸ் போல கூம்புகள் பெற்று உருமாறும். ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட மரபணுவை செலுத்தியதால் அதற்கு பலம் இருக்காது. இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு உடலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் லட்சக்கணக்கான கூம்புகளை உருவாக்குகிறது. அதை நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் உடனடியாக தாக்கி அழிக்கும் மேலும் அதை எப்படி அழித்தது என்பதையும் நினைவில் வைத்து உண்மையான கொரோனவைரஸ் பாதிப்பு ஏற்படும் பொழுது அதை தாக்குவதற்கு தயார் செய்யும் பணியையும் இந்த தடுப்பூசி செய்கிறது.
அடுத்தது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி, கொடிய கொரோனா வைரஸின் செயலற்ற வடிவமாக செயல்படும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்தில் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளியிடம் இருந்து இந்த ஸ்ட்ரைன் பிரித்தெடுக்கப்பட்டது. இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசியை தயாரிப்பதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அது பின்னர் வழங்கப்பட்டது. வைரஸின் செயலற்ற வடிவத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் உடலுக்குள் நுழைந்தால் அதை தாக்கி அழிக்க நோய் எதிர்ப்பு மண்டலத்தை தயார்படுத்தும் பணியை இந்த தடுப்பூசி செய்கிறது.
எவ்வளவு பயனுள்ளது ?
இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில், ஆக்ஸ்போர்டு பல்கலைகலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்தியர்களிடம் 70.4 சதவிகிதம் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் வெவ்வேறு டோஸ் செலுத்தப்பட்டு முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டன, அதில் சராசரியாக 70.4 சதவீத செயல்திறனை இந்த தடுப்பூசி காட்டியதும் கண்டறியப்பட்டது.
பாரத் பயோடெக்கின் தடுப்பூசியான கோவாக்சின், சமீபத்தில் வெளியிடப்பட்ட முதல்கட்ட சோதனை முடிவுகளின்படி, பயனுள்ள மற்றும் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி நாட்டின் பல இடங்களில் இன்னும் 3 ஆம் கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது, மேலும் நாடு முழுவதும் 23,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்ட மிகப்பெரிய மூன்றாம் கட்ட சோதனையாகவும் இது திகழ்கிறது.
உருமாறிய கொரோனா வைரஸ்க்கு எதிராகவும் செயல்படுமா?
அந்த நிறுவனங்களின் அறிக்கைகளின் படி, இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் பிரிட்டனில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்க்கு எதிராக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாக்சினின் புரதக் கூறுகள் உருமாற்றங்களையும் கவனிக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இதேபோன்று அஸ்ட்ராஜெனெகா தலைமை நிர்வாக அதிகாரியும், தடுப்பூசி கொரோனா வைரஸின் உருமாற்றங்களுக்கும் எதிராக திறம்பட செயல்படும் என்று கூறியுள்ளார். ஆனால் தென் ஆப்ரிக்காவில் பரவி வரும் மற்றொரு வகை கொரோனாவுக்கு எதிராக செயல்படுமா என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எத்தனை டோஸ்கள் தேவைப்படும் :
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் ஒருவருக்கு இரண்டு டோஸ்கள் வழங்கப்படும். ஆனால் எத்தனை வாரங்கள் இடைவெளியில் அவை செலுத்தப்படும் என்பதை இன்னமும் எந்த நிறுவனங்களும் இன்னமும் உறுதி செய்யவில்லை.
எவ்வளவு வெப்பநிலையில் வைக்க வேண்டும்:
இது முக்கியமான ஒன்று. ஏனெனில் ஃபைசர் போன்ற நிறுவனங்களின் தடுப்பூசியை போல -70 டிகிரியில் சேமிப்பு நிலைமைகள் தேவைப்பட்டால் இந்தியா போன்ற நாடுகளுக்கு அந்த குளிர் நிலையில் தடுப்பூசிகளை சேமிப்பது மற்றும் விநியோகம் செய்வதற்கு பெரும் சிக்கல் ஏற்படும். ஆனால், நல்வாய்ப்பாக இந்த இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் சாதாரண குளிர்பதன நிலையில் சேமித்து வைக்க முடியும்.
கட்டுரைகள்
முண்டாசு கவிஞனுக்குப் பிறந்தநாள்! யாருக்கும் தெரியாத ஒரு சம்பவம்!!


இன்று டிசம்பர் 11 ஆம் தேதி. பாரதம் போற்றும் பாரதியாரின் பிறந்தநாள். முண்டாசு கவிஞன் என்று அழைக்கப்படும் பாரதியார், தமிழுக்கும் தமிழகத்திற்கும் புத்துயிர் அளித்தவர். தமிழ் மொழியை உலகறியச் செய்தவர். யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றவர். தமிழுக்கு உயிரூட்டியவர்.
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என குழந்தைகளைக் கொஞ்சுவதிலும், உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொடுதடி என மனைவியிடம் உயிர்கலப்பானதிலும் பாரதியை மிஞ்சி எவரும் இல்லை. தன் வீடு, தன் குடும்பம் என்று இல்லாமல் அனைத்து தரப்பு மனிதர்களும் இறையருளின் வடிவமே என்று ஆன்மீகத்திலும் சுடர்விட்டவர் பாரதியார். இதையே தான் காக்கை சிறகினிலே நந்தலாலா என்ற பாடலில் உட்பொருளாக விவரித்திருப்பார். அந்தப் பாடல்,
காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா –
நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
பாரதியார் இவ்வளவு சித்தி பெற்றவர் என்பது அவருடைய நெருங்கியவர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அரசியல், மொழி, இனம், மதம், நாடு, உலகம் என அனைத்திலும் உயிர்கலப்பு செய்தவர்.
கட்டுரைகள்
அம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன? வெடிக்க என்ன காரணம்?


லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில், 70 பேர் பலியானதுடன், 4000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது குறித்த பல காணொளிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
எத்தனை டன் வெடிப்பு?
லெபனான் வெடிப்பு சம்பவத்தில் கிட்டத்தட்ட 2750 டன் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் வெடித்ததாக அந்நாட்டு அதிபர் மைக்கேல் ஆன், டிவீட் செய்துள்ளார். அதாவது இது 27,50,000 கிலோ அளவாகும்!
இந்த அம்மோனியம் நைட்ரேட் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் பாதுகாப்பற்ற சூழலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன?
வேதியியல் பெயரில் NH4NO3 என்று அழைக்கப்படும் அம்மோனியம் நைட்ரேட் இயற்கையாக கிடைக்கக் கூடியதாகும். இது அம்மோனியம் நேர்மின் அயனின் நைட்ரேட் உப்பாகி ஒரு வேதி சேர்மத்தில் உருவாகிறது. இது நீரில் எளிதில் கரையக் கூடிய தன்மைக் கொண்டுள்ளது.
சிலியில் உள்ள அடகாமா பாலைவனத்தில் இது அதிகம் கிடைக்கிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள ரசாயனங்கள் அமோனியம் நைட்ரிக் அமிலத்துடன் வினைபுரிந்தவையாகும்.
அம்மோனியம் நைட்ரேட் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது பொதுவாக உரங்களில் பயன்படுத்தப்படுகிறது. குவாரி மற்றும் சுரங்கத்திற்கு ஒரு வெடிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும்.
அம்மோனியம் நைட்ரேட் வெடிக்க காரணம்?
எந்தவொரு எரிபொருளும் வெடிக்க குறிப்பிட்ட சில காரணங்கள் தேவை. அதேபோல் தான் அமோனியம் நைட்ரேட்டுக்கும். அமோனியம் நைட்ரேட் மிகவும் ஆற்றல் கொண்டது. இது அதிக அளவு வெப்பத்தை வெளியிடுகிறது.
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அம்மோனியம் நைட்ரேட் இருந்தால் அது தீப்பிழம்பு போன்று வெளிப்புற வினைகள் பயன்படாமல் நெருப்பை வெளியிடுகிறது. இவ்வாறு அமோனியம் நைட்ரேட் எளிதில் வெடிக்கிறது. இவ்வாறு வெடிப்பதால் காற்று மாசுபடுவதோடு, பக்கவிளைவுகளையும் அதிகம் ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருள் இதுவாகும்.
எரிபொருளுடன் கலந்தால் அல்லது பாதுகாப்பற்ற முறையில் சேமிக்கப்பட்டால் அமோனியம் நைட்ரேட் வெடிக்கும் தன்மை கொண்டிருப்பதால் பேராபத்தை விளைவிக்கக்கூடும்.
தீவிரவாதிகளின் ஆயுதம்
குறைந்த விலையில் தயாரிக்கப்படும் ஆயுதம் அமோனியம் நைட்ரேட். இதை வெடிக்க வைக்க டெட்டனேட்டர் மற்றும் எரிபொருள் மட்டும் தேவைப்படுகிறது.
ஒரு உரக் குண்டு வெடிக்க டெட்டனேட்டர் காரணமாக அமைகிறது. வெடிக்கும் அலையின் ஆற்றல் அம்மோனியம் நைட்ரேட்டை ஆவியாக்குகிறது.
தீவிரவாதிகளின் தாக்குதலில், பால்டிக் எக்ஸ்சேன்ஜ் கட்டிட வெடிப்பு, பிஷப்ஸ்கேட், ஓக்லஹோமா நகரம் வெடிப்பு, டாக்லேண்ட்ஸ், மான்செஸ்டர் வெடிப்பு ஆகியவை அமோனியம் நைட்ரேட் குண்டால் நிகழ்த்தப்பட்டவை.
இது போன்று உலகம் முழுவதும் பல சம்பவங்களில், அமோனியம் நைட்ரேட் காரணமாக அமைந்துள்ளது.
This Post Was Originally Published in www.neotamil.com and first appeared as ‘அம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன? ஏன்? எப்படி வெடிக்கிறது? முழு விவரம்