இந்தியா
‘எம்.ஜி.ஆர் வழியில் ராகுல் காந்தி… மக்களோடு மக்களாக அமர்ந்து லன்ச்’- வைரலாகும் வீடியோ


மதுரையில் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களோடு மக்களாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பொங்கல் பண்டிகையின் போது ஆண்டாண்டு காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை அவனியாபுரத்தில் தொடங்கியது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்ப்பதற்கு என்ற் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரும் கேரள எம்.பி-யுமான ராகுல் காந்தி இன்று மதுரை வந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் கண்டு ரசித்தார்.
Significant gesture by @RahulGandhi.. #PoliticalPongal #Pongal pic.twitter.com/kO9PSWDReM
— Pramod Madhav♠️ (@PramodMadhav6) January 14, 2021
காலை வேளை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு பெற்றவுடன் மதுரையில் உள்ள தென்பலஞ்சி பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். அங்கு பொங்கல் விழா முடிந்த உடன் அப்பகுதி மக்கள் உடன் இணைந்து மதிய உணவு சாப்பிட்டார். மதிய உணவை மக்களுடன் மக்களாக அமர்ந்து உணவு சாப்பிட்ட வீடியோ காட்சி சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விருந்தினராக வந்த ராகுலை தம் வீட்டு பொங்கல் விருந்துக்கு அழைத்திட்ட பெண்கள் கூட்டம்!
கோலாகலம் பூண்ட தென்பலஞ்சி கிராமம் #RahulinTamizhVanakkam #VanakkamRahulGandhi pic.twitter.com/tkZrGUss8r— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) January 14, 2021
இந்தியா
சீரியஸாகும் நாராயணசாமி… சீன் போடும் கிரன் பேடி- புதுச்சேரியில் தொடரும் அதிகார மோதல்


புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையேயான அதிகார மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
புதுச்சேரிக்கு முதல்வராக நாராயணசாமியும் ஆளுநராக கிரண் பேடியும் பொறுப்பேற்று 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், இவர்களுக்கு இடையேயான மோதல் முடிந்தபாடில்லை. மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றத் தடையாக இருப்பதாக கிரண் பேடி மீது புகார்ப்பத்திரம் வாசிக்கிறார் முதல்வர் நாராயணசாமி. இதற்காக பொங்கலுக்கு முன்னர் தர்ணா போராட்டத்தில் தன் அமைச்சர்களுடன் சாலையில் அமர்ந்துவிட்டார்.
ஆனால், கிரண் பேடி எதற்கும் அசர்வதாகத் தெரியவில்லை. அமைச்சர்கள் கடிதம் அனுப்பினால் பதில் மட்டும் வருகிறதாம். ஆனால், எந்தவொரு திட்டத்துக்கும் அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறாராம் கிரண் பேடி. அமைச்சர் கந்தசாமி என்பவர் தற்போது சட்டப்பேரவையிலேயே குளித்துத் தூங்கி சாப்பிட்டு அங்கேயே போராட்டத்திலும் அமர்ந்து வருகிறார்.
ஆளுநர் கிரண்பேடி இதுவரையில் அரசின் சார்பில் முதல்வர், அமைச்சர்கள் என யாரையும் நேரிலேயே சந்திக்க முன் வரவில்லை என்றும் நாராயணசாமியும் அமைச்சர்களும் புகார் தெரிவிக்கின்றனர். தள்ளி அடித்து கிரண் பேடியைச் சந்திக்க சென்ற அமைச்சர்களை காவல் துறையினர் விட மறுப்பதால் தொடர்ந்து சாலையிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர். அதிகப்பட்சமாக அமைச்சர் கந்தசாமி கடந்த 10 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், கிரண் பேடி தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் கொடுக்கப்படவில்லை. இதற்காகவும் தனி கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்தியா
குடிபோதையில் 11 வயது மகனை கொளுத்திய தந்தை! உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!


ஹைதராபாத்தில் குடிபோதையில் பெற்ற மகனையே கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குஹட்பல்லியைச் சேர்ந்த பாலு என்பவர் கடந்த ஞாயிறன்று வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது 11 வயது மகன் சரண் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தான். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் அவனுக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில், சரண் சரியாக படிக்கவில்லை என்று கூறி பெற்ற மகன் என்றும் பாராமல் அடித்து உதைத்துள்ளார். பின்பு பீடியும் தீப்பெட்டியும் வாங்கி வரச் சொல்லியுள்ளார். சரணும் பயத்துடன் தந்தை கேட்டதை வாங்கிக் கொடுத்துள்ளான்.
அதன்பிறகும் ஆத்திரம் குறையாமல், குடிபோதையில் மகன் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். சரணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சரணை மீட்டு 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தியா
உத்தர பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர் பலி!


உத்தர பிரதேச மாநிலத்தில், 46 வயதுடைய சுகாதார ஊழியருக்கு நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட 24 மணி நேரத்திற்குள் அந்த நபர் இறந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் வார்டு பாயாக பணி செய்து வந்தவர் மகிபால் சிங். அவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இது குறித்து மொராதாபாத் தலைமை மருத்து அதிகாரி எம்.சி.கார்க் கூறுகையில், ‘சனிக்கிழமை அவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின்னர், ஞாயிற்றுக் கிழமை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. நெஞ்சு வலியும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் இறந்துள்ளார். அவரது மரணத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம். விரைவில் பிரேதப் பரிசோதனை முடிவு எங்கள் கைகளுக்கு வரும். அவர் தடுப்பூசி காரணமாக இறந்துள்ளதாக எங்களுக்குத் தோன்றவில்லை’ என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் மகிபால் சிங்கின் மகன், ‘தடுப்பூசி போடுவதற்கு முன்னரே என் தந்தையின் உடல் நிலை சற்று குறைபாடுகள் உடன் தான் இருந்தது. ஆனால் தடுப்பூசி போட்ட பின்னர் அவர் அதிக உடல் உபாதைகளை அனுபவித்தார்’ என்று அதிர்ச்சிகர தகவலைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட்ட நிறைய பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பயன்பாட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளில் கோவாக்ஸின் என்கிற தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் கிளப்பப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தடுப்பூசி போட்டதால் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என்கிற செய்தி மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.