இந்தியா
பறவைக் காய்ச்சல் எதிரொலி.. டெல்லியில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கு தடை!


பறவைக் காய்ச்சல் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், டெல்லி வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாநகராட்சிகள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை விற்க, சேமித்து வைக்க தடை விதித்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளன.
உணவகங்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சி உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி வடக்கு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோழி இறைச்சி குறித்து யாரும் பயப்பட வேண்டாம். நன்கு சமைக்கப்பட்ட கோழி இறைச்சிகளைச் சாப்பிடலாம் என்று டெல்லி சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்ட அதே நேரத்தில் வடக்கு டெல்லி கார்ப்ரேஷன் கோழி இறைச்சிகளைத் தடை செய்வதாக உத்தரவிட்ட அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இறந்த பறவைகளை வெறும் கையில் தொட வேண்டாம். பறவைகள் எங்காவது இறந்து கிடந்தால் 23890318 என்ற எண்ணிற்கு அழைக்கவும். 70 டிகிரி செல்ஷியலில் 30 நிமிடம் வரை வேக வைத்து கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை அட்டும் சாப்பிடவும். முழுமையாக வேகாத இறைச்சி, ஆப்-பாயில், முழுமையாக வறுக்கப்படாத முட்டைகளைச் சாப்பிட வேண்டாம் என்று எல்லாம் டெல்லி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது என்று தற்போது வரை எந்த அறிவியல் பூர்வ தரவுகளும் இல்லை. எனவே மாநிலங்கள் கோழி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்க தேவையில்லை என்று மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேவையில்லாத தடைகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் என்று மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
இந்தியா
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழப்பு..! குடிப்பழக்கம் காரணமா?


தெலங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான வழிமுறைகளும், செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை போன்றவைகளும் அரசு தரப்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. யாரெல்லாம் தடுப்பூசி போடலாம், யார் போடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். 42 வயதாகும் அவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை சுமார் 11 மணியளவில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
பின்பு, நேற்று அதிகாலையில் திடீரென அந்த சுகாதார பணியாளருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அருகிலிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் பரவிய நிலையில், அம்மாநில சுகாதார இயக்குநர் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். கொரோனா தடுப்பூசிக்கும் பணியாளர் உயிரிழப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். குடிப்பழக்கம் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மரணம் ஏற்படுமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தியா
பாரம்பரிய கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம்… சூளுரைக்கும் உத்தவ் தாக்கரே!


கர்நாடகாவில் மராட்டி பேசும் மக்கள் நிறைந்து காணப்படும் பாரம்பரிய பகுதிகளை விரைவில் மஹாராஷ்டிராவுடன் இணைப்போம் என மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா- கர்நாடகா எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் மராட்டி மொழி பேசும் மக்கள் அதிக ஆண்டுகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். பாரம்பரியம் மிகுந்த இப்பகுதியை மஹாராஷ்டிரா உடன் இணைக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக மராட்டி சங்க அமைப்புகள் பல போராடி வருகின்றனர். கர்நாடகா- மஹாராஷ்டிரா இடையே இந்த விவகாரம் பெரும் மொழி எல்லைக் கலவரத்தையே ஏற்படுத்தி உள்ளதாம்.
இது போன்று மொழி சார்ந்த எல்லை கலவரத்தில் மரணம் அடைந்தவர்களுக்காக மஹாராஷ்டிராவில் ஆண்டுதோறும் ஜனவரி 17-ம் தேதி தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில், “மஹாராஷ்டிரா எல்லைக்கு அருகில் உள்ள பாரம்பரிய கர்நாடகா பகுதிகளை எங்கள் மாநிலத்துடன் இணைக்கும் வரையில் ஓயமாட்டோம். மாநில எல்லைப் பிரச்னையில் உயிர்த் தியாகம் செய்த அத்தனை தியாகிகளுக்குமான நன்றிக்கடனாக இந்தக் காரியத்தை நிச்சயம் செய்து முடிப்பேன்” என சூளுரை எடுத்துள்ளார்.
இந்தியா
சீரியஸாகும் நாராயணசாமி… சீன் போடும் கிரன் பேடி- புதுச்சேரியில் தொடரும் அதிகார மோதல்


புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையேயான அதிகார மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
புதுச்சேரிக்கு முதல்வராக நாராயணசாமியும் ஆளுநராக கிரண் பேடியும் பொறுப்பேற்று 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், இவர்களுக்கு இடையேயான மோதல் முடிந்தபாடில்லை. மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றத் தடையாக இருப்பதாக கிரண் பேடி மீது புகார்ப்பத்திரம் வாசிக்கிறார் முதல்வர் நாராயணசாமி. இதற்காக பொங்கலுக்கு முன்னர் தர்ணா போராட்டத்தில் தன் அமைச்சர்களுடன் சாலையில் அமர்ந்துவிட்டார்.
ஆனால், கிரண் பேடி எதற்கும் அசர்வதாகத் தெரியவில்லை. அமைச்சர்கள் கடிதம் அனுப்பினால் பதில் மட்டும் வருகிறதாம். ஆனால், எந்தவொரு திட்டத்துக்கும் அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறாராம் கிரண் பேடி. அமைச்சர் கந்தசாமி என்பவர் தற்போது சட்டப்பேரவையிலேயே குளித்துத் தூங்கி சாப்பிட்டு அங்கேயே போராட்டத்திலும் அமர்ந்து வருகிறார்.
ஆளுநர் கிரண்பேடி இதுவரையில் அரசின் சார்பில் முதல்வர், அமைச்சர்கள் என யாரையும் நேரிலேயே சந்திக்க முன் வரவில்லை என்றும் நாராயணசாமியும் அமைச்சர்களும் புகார் தெரிவிக்கின்றனர். தள்ளி அடித்து கிரண் பேடியைச் சந்திக்க சென்ற அமைச்சர்களை காவல் துறையினர் விட மறுப்பதால் தொடர்ந்து சாலையிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர். அதிகப்பட்சமாக அமைச்சர் கந்தசாமி கடந்த 10 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், கிரண் பேடி தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் கொடுக்கப்படவில்லை. இதற்காகவும் தனி கண்டனங்கள் குவிந்து வருகின்றன.