விமர்சனம்
நல்ல மார்க் வாங்கி இருக்க வேண்டிய மாஸ்டர் பார்டரில் பாஸ் ஆகியிருக்கிறார்… மாஸ்டர் விமர்சனம்…!


சென்னையில் எப்போதும் குடி போதையில் அடாவடி செய்து கொண்டு திரியும் கல்லூரி ஆசிரியர் ஜான் துரைராஜ் (விஜய்) ஒரு சந்தர்ப்பத்தில் நாகர்கோவிலில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார். அங்கே சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு துன்புறுத்தப்படும் சிறுவன், வளர்ந்து பெரிய ரவுடியாக உருவாகியிருக்கிறான் பவானி (விஜய் சேதுபதி). தன் ரவுடிசத்திற்கு சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் சிறுவர்களையே பயன்படுத்திக்கொள்கிறான். அங்கு வரும் புதிய ஆசிரியரான ஜான் துரைராஜ் (விஜய்), பவானியை வீழ்த்தி எப்படி சிறுவர்களைக் காக்கிறார் என்பதுதான் மாஸ்டர்.
தொடர்ந்து அட்லீ படத்தில் நடத்தி வெறுப்பேற்றிக் கொண்டிருந்த விஜய் மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற அறிவிப்பு வந்ததும் அவரது ரசிகர்களுக்கு மட்டும் இல்லை காமன் ஆடியன்ஸ்-க்கும் பெரிய எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. மாநகரம் மாதிரி செம்ம திரைக்கதை, கைதி மாதிரி ஆக்ஷன் அட்டகாசம் என மாஸ்டர் டபுள் ட்ரீட் இருக்கு என்ற எதிர்பார்ப்பு வேறு.
ஜேடி என்ற கல்லூரி ஆசிரியராக விஜய் எப்படியும் ஒரு ஐம்பது வயது இருக்கும். ஆனால், அவ்ளோ இளமையா இருக்கிறார். முதல் பாதி முழுவதும் அவ்வளவு மெனரிசம். பாடி லாங்குவேச் என மனிதன் அட்டகாசம் செய்திருக்கிறார். வழக்கமான விஜயாக இல்லாமல் அசத்தியிருக்கிறார். சண்டை, டான்ஸ் என படம் முதல் பாதி முழுவதும் இவரே ஆக்கிரமிக்கிறார். பிற்பாதியில் சீர்திருத்த பள்ளிக்கு செல்லும் விஜய் தன்னுடைய குடி, அடாவடிகளை நிறுத்து வேறு ஒரு ஆளாக வந்து நிற்கிறார் மீசை இல்லாமல் அழகாக. ஒவ்வொரு பிரேமும் விஜய் ஸ்கிரீனை முழுமையாக ஆக்கிரமிக்கிறார். பேசியே வில்லன்களை திருத்தவும் செய்கிறார் (எல்லாம் எவ்ளோ பாத்திருக்கும். லோகேஷ் நீங்களுமா?)
பவானியாக விஜய் சேதுபதி நீண்ட நாளுக்கு பிறகு கொஞ்சம் நடித்திருக்கிறார். சின்ன சின்ன வசனங்கள், பார்வை, நடை, உடை மூலமே வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார். முதல் பாதியில் கொஞ்சம், இரண்டாம் பாதியில் கொஞ்சம் கடைசியில் வழக்கமான வில்லனாக ஹீரோவிடம் அடி வாங்குவதற்கு கொஞ்சம் மட்டுமே விஜய் சேதுபதியை பயன்படுத்தியிருக்கிறார் லோகேஷ். ஆனாலும், ஹீரோவுக்கு நெருக்கமானவங்களை கொலை செய்வது, மிரட்டுவது என அதே பழைய பாணி வில்லத்தனமும் செய்ய வைத்திருக்கிறார்.
இந்த படத்தை உண்மையில் போரடிக்காமல் கொண்டு செல்வது அனிருத்தின் இசை தான். விஜய்க்கும், விஜய் சேதுபதிக்கு பாரபட்சம் பார்க்காமல் பிஜிஎம் போட்டு அசத்திவிட்டார். பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்பதால் அதை தனியாக சொல்லவில்லை.இந்த படம் உண்மையில் மாணவர்களுக்கான அரசியல் புரிதல் வேண்டும், சிறார் குற்றங்களின் பின்னணி, அதற்கான காரணம், அவர்களை மீட்கும் வழி என புதிய ஒரு கதை களத்தை கையில் எடுத்துக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் நோக்கம் அதுவாக இல்லையா அல்லது ஹீரோவுக்காக மாற்றப்பட்டதா என தெரியவில்லை. நிறைய சண்டை காட்சி, அதிலே மாஸ் காட்சி, அதற்குள்ளே வில்லன், வில்லனுக்கு மாஸ் காட்சி என்று மட்டும் சுருங்கி விட்டது. உண்மையில் சுருங்கி இருக்க வேண்டியது எடிட்டிங்கில் தான். 3 மணி நேரம், சுவாரஸ்யம் இல்லாத அதும் ரசிகனின் பொறுமையை முழுமையாக சோதிக்கும் இரண்டாம் பாதியை அவ்ளோ நேரம் பார்ப்பது எல்லாம் கஷ்டமாத்தான் இருக்கு. லோகேஷ் கனகராஜின் சில க்ளிஜே காட்சிகளும் இருக்கின்றன. கமர்சியல் படங்களில் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது தான் என்றாலும் ஒரு அளவில்லாமல் லாஜிக் ஓட்டைகள் வேறு. உண்மையில் டிஸ்டிங்சன் வாங்கியிருக்க வேண்டிய மாஸ்டர் பார்டரில் பாஸ் செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
விமர்சனம்
ஆண் முகத்தில் சாட்டையை வீசியிருக்கிறது… The Great Indian Kitchen விமர்சனம்…


திருமணம் ஆகிச் செல்லும் ஒரு பெண் தன் கணவன் வீட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறாள். அல்லது என்ன செய்ய வைக்கப்படுகிறாள். அவளது எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதையும் அந்த கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்தில் இருந்து மீள அவள் எடுத்த முடிவு என்ன என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் படம் தான் The Great Indian Kitchen என்ற மலையாளப் படம்.
எப்போது ஒரு சின்ன ஒன்லைனை வைத்துக்கொண்டு அட்டகாசமாக படமாக்கும் பல இயக்குநர்கள் மலையாளத்தில் உண்டு என்பதற்கு மற்றுமொரு உதாரணம் தான் ஜோ பேபியின் இந்த The Great Indian Kitchen.
நல்ல திறமையான டான்ஸ் ஆடும் பெண் திருமணம் ஆகிச் செல்கிறாள். அன்றைய நாளில் இருந்து தினமும் காலையில் எழுந்து வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது… வீட்டு வேலைகளை செய்வது… இது இரண்டை தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை என்ற நிலையில் வாழ்கிறார். அதுதான் பெண்ணின் கடமை, குடும்பத்திற்காக வாழ்வதுதான் பெண்ணிற்கு படைக்கப்பட்ட உன்னதமான வாழ்க்கை என்று ஆண்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
நாயகி மட்டுமல்ல, அவள் பேசும், சந்திக்கும் அனைத்து பெண்களும் சமைப்பது, வீட்டு வேலைகளை செய்வதைப் பற்றி மட்டும்தான் பேசுகிறார்கள். தன் செருப்பை கூட தான் எடுத்து போட்டுக்கொள்ளாத ஆண்கள் தான் இங்கே இருக்கிறார்கள் என்பதை சொல்கிறது.
நாகரீகம், அறிவியல், பண்பாடு என பலதரப்பட்ட வகையில் இந்திய சமூகம் வளர்ந்துவிட்டாலும்
பெண் சுதந்திரம், பெண்கள் முன்னேற்றம், பெண்ணிய சிந்தனை எனப் பேசும் பல முற்போக்குவாதிகளும் பெண்களை ஒரு சடப் பொருளாகத்தான் நினைக்கிறார்கள் என்பதை மீண்டும் அழுத்தமாக சொல்லியிருக்கிறது The Great Indian Kitchen.
நாயகியாக நிமிஷா சசயன் சோறு ஆக்குவது, வீட்டை சுத்தம் செய்வது, வீட்டுக் கழிவுகளை அகற்றுவது, கணவனுக்கு தோணும் போது அவன் விருப்பப்படி செக்ஸ் வைத்துக்கொள்வது என வாழும் பெண். அவற்றை சகித்துக்கொண்டு ஒரு சராசரி இந்திய பெண்ணின் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனாக சூரஜ் வெஞ்சரமூடு… ஒட்டுமொத்த ஆண்களின் உருவமாக நிற்கிறார். அவரது பாத்திரம் மீது வெறுப்பு உருவாகும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கிறது.
தொடர்ந்து வரலாற்றில் பெண்களுக்கான இடம் பற்றி பேசிக்கொண்டே வருகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கான இடம் என்ன என்பதில் இன்னும் பலருக்கும் ஒரே கருத்துதான் உள்ளது. இந்த லட்சனத்தில் கமல்ஹாசன் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு சம்பளம் என்று வேறு சொல்கிறார். இதெல்லாமுமா வளர்ச்சி.
உண்மையில் பெண்களை புரிந்துகொண்ட சமூகம் இன்னும் உருவாகவில்லை. இனியும் உருவாகப் போவதில்லை. பெண்களுக்கான வழிகளை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அது ஆணதிகார மையத்திடம் இருந்து ஒரு சின்ன அளவும் கிடைக்கப் போவதில்லை. ஆண்கள், ஆணகளால் கட்டமைக்கப்பட்ட இந்த சமூகம் எப்போதும் பெண்களை போகப் பொருளாக, வீட்டு வேலை செய்யும் ஒரு கருவியாக மட்டுமே பார்க்கும் என்பதை ஆண்களின், சமூகத்தின் முகத்தில் அறைந்தார் போல சொல்லியிருக்கும் மற்றொரு படைப்புதான் The Great Indian Kitchen.
கட்டாயம் அனைத்து ஆண்களும் பார்க்க வேண்இய படம் இந்த The Great Indian Kitchen. நிச்சயம் ஒரு நல்ல சினிமா பார்த்த உணர்வைக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை…
விமர்சனம்
இன்னும் எத்தனை படங்கள் இப்படி?… புலிக்குத்தி பாண்டி விமர்சனம்


ஊருக்குள் அடிதடி செய்துகொண்டு வேலை வெட்டி இல்லாமல் முடி வெட்டக் கூட நேரம் இல்லாமல் சுற்றித்திரிகிறார் கதாநாயகன் புலிக்குத்தி பாண்டி (விக்ரம் பிரபு). அப்பாவி அப்பா மற்றும் குடிகார, சூதாடியாக திரியும் இரண்டு அண்ணன்களின் பாவப்பட்ட குடும்பத்தை தன் சொந்த உழைப்பால் தூக்கி நிறுத்திக்கொண்டிருக்கிறார் பேச்சியம்மாள் (லட்சுமி மேனன்). ஊருக்குள் வட்டிக்கு விடுவது… வட்டிக்குப் பதில் சொத்தை அல்லது வட்டிக்கு வாங்கியவர்களின் குடும்ப பெண்களை எழுதி வாங்குவது… இல்லை என்றால் தன் சின்ன மகன் சரவெடி (ஆர்.கே.சுரேஷ்) மூலம் அவர்களை கழுத்திலேயே வெட்டுவது, அவனை காப்பாற்ற தன் அடுத்த மகன் டிஎஸ்பி சங்கையாவை (அருள் தாஸ்) பயன்படுத்துவது என வாழ்ந்து வருகிறார் சன்னாசி (வேல ராமமூர்த்தி). இந்த மூன்று வித்தியாசமான குடும்பங்கள் ஒரு மையத்தில் இணைகின்றன. ஏன்… எதற்காக… எப்படி என்பதை 500 டெசிபல் சத்தத்திலும் 1,000 லிட்டர் ரத்தத்திலும் சொல்லியிருக்கும் படம் தான் இந்த புலிக்குத்தி பாண்டி…
முந்தைய முத்தையா படங்களுக்கும் இதுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அதை கடைசியில் சொல்கிறேன்.
தன்னுடைய படங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியை மையமிட்டதாகத்தான் இருக்கும் என்று முத்தையா முன்னரே சொல்லிவிட்டதால் அதைப் பற்றியும் இங்கே இனி சொல்லப்போவதுமில்லை.
புலிக்குத்தி பாண்டியாக விக்ரம் பிரபு. பாதி முகத்தை தாடியும் தலை முடியும் மறைத்துக்கொள்ள மீதம் இருக்கும் கொஞ்சூண்டு இடத்தில் உணர்ச்சிகளை காட்ட முயற்சி செய்திருக்கிறார். மற்றபடி முத்தையாவின் வழக்கமான ஹீரோதான் இந்த புலிக்குத்தி பாண்டி. எந்த வித்தியாசமும் இல்லை. அதே போலத்தான் நாயகி லட்சுமி மேனன் கதாபாத்திரமும் மற்ற துணை கதாபாத்திரங்களையும் எழுதியிருக்கிறார்.
வில்லனாக சன்னாசி. ஊர்க்கார வில்லன் என்றாலே வேலராமமூர்த்தி, அருள் தாஸ், ஆர்.கே.சுரேஷ்-ஐ முதல்ல புக் பண்ணுங்கப்பா என்று சொல்லும் அளவுக்கு உருவாகிவிட்டார்கள். ஒரே பெண்ணுடன் குடும்பமே உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக எழுதியிருக்கிறார்.
கதைக்களம், நடிகர்கள், கதை, வசனம், பாடல்கள் என அனைத்தும் தன்னுடைய முதல்படத்தில் இருந்தது போலவே அமைத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.
என்.ஆர்.ரகுநாதனின் இசையிலும் எந்த புதுமையும் இல்லை. கரிசல்காட்டு சாலைகளை, ஊர்களை வேல்ராஜ் கொஞ்சமேனும் அழகாக காட்டியிருக்கிறார்.
என்னடா தொடர்ந்து முத்தையாவை பற்றியே பேசியிட்டுருக்கீங்கன்னு கேட்கிறீங்களா? ஒரு படம் எப்படி இருக்க வேண்டும் இருக்கிறது என்பது இயக்குநர் கையில் தான் இருக்கிறது. சில படங்களில் கதை நன்றாக இருந்து நடிகர்கள் சொதப்பிவிடுவார்கள். அது ரொம்பவே குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் முத்தையா சொன்னதை நடிகர்கள் உண்மையில் கட்சிதமாகவே செய்திருக்கிறார்கள்.
ஒரே மாதிரியான படங்கள் தான் என்றாலும் சி சென்டர் ஆடியன்ஸை முத்தையா எப்போதும் திருப்தி செய்து விடுகிறார். புலிக்குத்தி பாண்டியிலும் சாத்தியம் ஆகியிருக்கிறது என்பதுதான் உண்மை. அதற்கு இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் புலிக்குத்தி பாண்டிக்கு வந்த பார்வையே சாட்சி.
ஹீரோவை பழிவாங்க அவனது குடும்பத்தை பழிவாங்கும் வில்லனை பழிவாங்குவான் ஹீரோ. ஆனால், இந்த படத்தில் வில்லன் ஹீரோவை கொலை செய்துவிட வில்லனை குடும்பமே சேர்ந்து பழிவாங்கும் படி செய்திருக்கிறார் முத்தையா… (எப்புடி… கதையில் செம்ம வித்யாசம்ல)
விமர்சனம்
விவசாயிகளுக்கு ஆப்பு அடிக்க முயன்றிருக்கிறார் ஜெயம் ரவி… பூமி விமர்சனம்


இளம் வயதில் சிறிய செயற்கை கோள் செய்ய அதன் மூலம் நாசாவில் வேலை கிடைத்து பணியாற்றுகிறார் பூமிநாதன் (ஜெயம் ரவி). செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்து அங்கே மனிதர்களை குடியேற்றும் புராஜெக் செய்து வருபவருக்கு ஒருமாதம் லீவ் கிடைக்கிறது. லீவுக்கு சொந்த கிராமத்திற்கு செல்லலாம் என நினைத்து திருநெல்வேலியில் இருக்கும் தன்னுடையை ஊருக்கு வருகிறார் பூமிநாதன். அங்கே விவசாயிகள் படும் துன்பத்தை பார்த்து, அதை போக்க தானும் விவசாயம் செய்யலாம் என முடிவுசெய்கிறார்.
விவசாயம் செய்ய தொடங்கும் பூமி அவர்களின் துன்பத்திற்கு காரணம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் என்பதை தன்னுடைய விஞ்ஞான மூளை மூலம் கண்டுபிடிக்கிறார். பின்னர் சொந்தமாக விவசாயம் செய்யவிடாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரச்னைகளை ஏற்படுத்த, பூமிநாதன் அதில் இருந்து மீண்டுவர என்ன செய்கிறார், விவசாயிகளையும் விவசாயத்தையும் எப்படி காப்பாற்றுகிறார் பூமி படத்தின் கதை…
விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான ஒற்றை வரி கதை
ஒரு காட்சியில் கூட நம்பகத்தன்மை இல்லை. விவசாயம் பற்றிய தெளிவான புரிதல் இல்லை, விவசாயிகள் பிரச்னை பற்றி தெரியவில்லை, இயற்கை விவசாயம் என்றால் என்ன என்ற சின்ன அளவு கூட தெளிவு இல்லை. விவசாயம்… விவசாயம் என ரத்தம் தெரிக்க இயக்குநர் சொன்னதை விட கொஞ்சம் ஓவராகவே உணர்ச்சியை கொட்டி நடித்து தள்ளி விட்டார் ஜெயம் ரவி. பார்க்கவே சிரிப்பாக இருக்கிறது (கேளிச்சிரிப்பு).
டிஸ்கரி, சோனி பிபிசி மட்டும் இல்லை ஆங்கில சினிமாக்களிலேயே நல்ல தமிழில் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், வெளிநாட்டு அல்லது கார்ப்பரேட் வில்லன் என்றாலே தமிழ் சினிமா வில்லன் அறைகுறை தமிழில் தான் பேசுவார் என்ற ஆதிகாலத்து விசயத்தையே இங்கேயும் கொண்டுவந்துள்ளார் இயக்குநர். வில்லன் பேசும் போதெல்லாம் செம்மையாக கடுப்பு ஏறுகிறது.இமானின் இசையும் அவ்வளவு சிறப்பாக இல்லை.
விவசாயம் பற்றி பேச வந்து இலவச மின்சாரம் தேவையில்லை; கடன் தள்ளுபடி தேவையில்லை; டென்மார்க் நாடு விவசாயம் செய்தே முன்னேறி வருகிறது என விவசாயிகளுக்கு ஆப்பு அடிக்கவே இந்த பூமி முயற்சி செய்திருக்கிறது. விவசாயம் பற்றி வாட்சப்பில் வந்ததை தமிழன் என்றால் பார்வர்டு செய் ரக உணர்ச்சியில் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் லட்சுமணன். இவரது ரோமியோ ஜூலியட் மட்டும் தான் சுவாரஸ்யமான படம். போகன் ஒரு போங்கு… பூமி விவசாயிகளுக்கு அடிக்க வந்த ஆப்பு…
ஹார் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது (இதை ஏன் சொல்லுவானே உங்களையும் கஷ்டபடுத்துவானேனு பார்த்தேன்.)
-
சினிமா செய்திகள்1 day ago
பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலின் வீடியோ ரிலீஸ்; அடிச்சுத்தூக்கும் வைரல்!
-
சினிமா செய்திகள்1 day ago
மது போதையில் தகராறு..? சண்டையிடும் நடிகர் விஷ்ணு விஷாலின் சிசிடிவி வீடியோ – உண்மை என்ன??
-
கிரிக்கெட்1 day ago
INDvENG – “பைத்தியக்கார உலகம்…”- இங்கி., – இந்தியா தொடர் குறித்து மைக்கெல் வாகன் கடும் விமர்சனம்!
-
டிவி1 day ago
உச்ச கட்ட கோபத்தில் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்கள்… விஜய் டிவி-க்குக் குவியும் கண்டனங்கள்!