விமர்சனம்
இன்னும் எத்தனை படங்கள் இப்படி?… புலிக்குத்தி பாண்டி விமர்சனம்


ஊருக்குள் அடிதடி செய்துகொண்டு வேலை வெட்டி இல்லாமல் முடி வெட்டக் கூட நேரம் இல்லாமல் சுற்றித்திரிகிறார் கதாநாயகன் புலிக்குத்தி பாண்டி (விக்ரம் பிரபு). அப்பாவி அப்பா மற்றும் குடிகார, சூதாடியாக திரியும் இரண்டு அண்ணன்களின் பாவப்பட்ட குடும்பத்தை தன் சொந்த உழைப்பால் தூக்கி நிறுத்திக்கொண்டிருக்கிறார் பேச்சியம்மாள் (லட்சுமி மேனன்).
ஊருக்குள் வட்டிக்கு விடுவது… வட்டிக்குப் பதில் சொத்தை அல்லது வட்டிக்கு வாங்கியவர்களின் குடும்ப பெண்களை எழுதி வாங்குவது… இல்லை என்றால் தன் சின்ன மகன் சரவெடி (ஆர்.கே.சுரேஷ்) மூலம் அவர்களை கழுத்திலேயே வெட்டுவது, அவனை காப்பாற்ற தன் அடுத்த மகன் டிஎஸ்பி சங்கையாவை (அருள் தாஸ்) பயன்படுத்துவது என வாழ்ந்து வருகிறார் சன்னாசி (வேல ராமமூர்த்தி). இந்த மூன்று வித்தியாசமான குடும்பங்கள் ஒரு மையத்தில் இணைகின்றன. ஏன்… எதற்காக… எப்படி என்பதை 500 டெசிபல் சத்தத்திலும் 1,000 லிட்டர் ரத்தத்திலும் சொல்லியிருக்கும் படம் தான் இந்த புலிக்குத்தி பாண்டி…
முந்தைய முத்தையா படங்களுக்கும் இதுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அதை கடைசியில் சொல்கிறேன்.
தன்னுடைய படங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியை மையமிட்டதாகத்தான் இருக்கும் என்று முத்தையா முன்னரே சொல்லிவிட்டதால் அதைப் பற்றியும் இங்கே இனி சொல்லப்போவதுமில்லை.
புலிக்குத்தி பாண்டியாக விக்ரம் பிரபு. பாதி முகத்தை தாடியும் தலை முடியும் மறைத்துக்கொள்ள மீதம் இருக்கும் கொஞ்சூண்டு இடத்தில் உணர்ச்சிகளை காட்ட முயற்சி செய்திருக்கிறார். மற்றபடி முத்தையாவின் வழக்கமான ஹீரோதான் இந்த புலிக்குத்தி பாண்டி. எந்த வித்தியாசமும் இல்லை. அதே போலத்தான் நாயகி லட்சுமி மேனன் கதாபாத்திரமும் மற்ற துணை கதாபாத்திரங்களையும் எழுதியிருக்கிறார்.
வில்லனாக சன்னாசி. ஊர்க்கார வில்லன் என்றாலே வேலராமமூர்த்தி, அருள் தாஸ், ஆர்.கே.சுரேஷ்-ஐ முதல்ல புக் பண்ணுங்கப்பா என்று சொல்லும் அளவுக்கு உருவாகிவிட்டார்கள். ஒரே பெண்ணுடன் குடும்பமே உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக எழுதியிருக்கிறார்.
Also Read: விவசாயிகளுக்கு ஆப்பு அடிக்க முயன்றிருக்கிறார் ஜெயம் ரவி… பூமி விமர்சனம்
கதைக்களம், நடிகர்கள், கதை, வசனம், பாடல்கள் என அனைத்தும் தன்னுடைய முதல்படத்தில் இருந்தது போலவே அமைத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.
என்.ஆர்.ரகுநாதனின் இசையிலும் எந்த புதுமையும் இல்லை. கரிசல்காட்டு சாலைகளை, ஊர்களை வேல்ராஜ் கொஞ்சமேனும் அழகாக காட்டியிருக்கிறார்.
என்னடா தொடர்ந்து முத்தையாவை பற்றியே பேசியிட்டுருக்கீங்கன்னு கேட்கிறீங்களா? ஒரு படம் எப்படி இருக்க வேண்டும் இருக்கிறது என்பது இயக்குநர் கையில் தான் இருக்கிறது. சில படங்களில் கதை நன்றாக இருந்து நடிகர்கள் சொதப்பிவிடுவார்கள். அது ரொம்பவே குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் முத்தையா சொன்னதை நடிகர்கள் உண்மையில் கட்சிதமாகவே செய்திருக்கிறார்கள்.
ஒரே மாதிரியான படங்கள் தான் என்றாலும் சி சென்டர் ஆடியன்ஸை முத்தையா எப்போதும் திருப்தி செய்து விடுகிறார். புலிக்குத்தி பாண்டியிலும் சாத்தியம் ஆகியிருக்கிறது என்பதுதான் உண்மை. அதற்கு இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் புலிக்குத்தி பாண்டிக்கு வந்த பார்வையே சாட்சி.
ஹீரோவை பழிவாங்க அவனது குடும்பத்தை பழிவாங்கும் வில்லனை பழிவாங்குவான் ஹீரோ. ஆனால், இந்த படத்தில் வில்லன் ஹீரோவை கொலை செய்துவிட வில்லனை குடும்பமே சேர்ந்து பழிவாங்கும் படி செய்திருக்கிறார் முத்தையா… (எப்புடி… கதையில் செம்ம வித்யாசம்ல)
விமர்சனம்
அடிப்பொலி இரண்டாம் பாதிக்காக சுமாரான முதல் பாதியை பொறுத்துக்கொள்ளலாம் – த்ரிஷ்யம் – 2 விமர்சனம்


எதிர்பாராத விதமாக தன் மகள் செய்யும் கொலைக் குற்றத்தில் இருந்து தன் குடும்பத்தை தப்பிக்க வைத்து விட்டு சொந்தமாக தியேட்டர் வாங்கி நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் ஜார்ஜ்குட்டி (மோகன்லால்). அந்தக் கொலை வழக்கு முடிந்து ஆறு ஆண்டுகள் (ஆம், இந்தக் கதை 6 ஆண்டுகள் கழித்து நடக்கிறாது) ஆனால், போலீஸ் அந்த வழக்கு தொடர்பான விசாரணையிலேயே இருக்கிறது.
ஊரில் அந்தக் கொலையை ஜார்ஜ்குட்டி குடும்பத்தினர் தான் செய்தனர் என ஆங்காங்கே பேசிக்கொண்டே வருகிறார்கள். யாருமே பார்க்கமால் முடிந்துவிட்ட கொலை தொடர்பாக திடீரென ஒரு துப்பு கிடைக்கிறது போலீசாருக்கு… அந்த துப்பு மூலம் மீண்டும் வருண் கொலை வழக்கை தோண்டி ஆமாம் உண்மையில் தோண்டி ஜார்ஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்கிறார்கள் போலீஸ்காரர்கள்… மீண்டும் அந்தக் கொலை வழக்கில் இருந்து தன் குடும்பத்தை காப்பாறினாரா ஜார்ஜ்குட்டி என்பதை சொல்லும் படம்தான் த்ரிஷ்யம் – 2…
பார்ட் – 2 என்றாலே சூர மொக்கைதான் என்ற வழக்கத்தை அடித்து நொருக்கியிருக்கிறது இந்தப் படம். அட்டகாசமான ட்விஸ்டுகளுடன் திரைக்கதையை அமைத்திருக்கிறார் ஜீத்து ஜோசப். எந்த ட்விஸ்டையும் பார்வையாளனால் கண்டுபிடிக்க முடியாமல் எழுதி மாயாஜாலம் செய்திருக்கிறார் இயக்குநர்… ஜார்ஜும் அவர்களது குடும்பமும் செய்தது கொலை. அதை மறைப்பது அதைவிட பெரிய குற்றம். சுயநலவாதிகள் என பல வகையில் அவர்களை வெறுக்க வாய்ப்பி இருந்தாலும் அந்தக் குடும்பம் தப்பித்துவிட வேண்டும். மீனா எங்கையுமே உளறிவிடக் கூடாது… அந்த இரண்டு பெண் குழந்தைகளும் பாவம்… என்று பரிதாபம் ஏற்படும் அளவிற்கு அட்டகாசமாக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எழுதியுள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் குடும்பம். தன் குடும்பத்தை காப்பாற்ற எந்த அளவுக்கும் இறங்கும் ஜார்ஜாக மோகன்லால் கதாபாத்திரம். உண்மையில் இந்தக் கதைக்கு இவரை விட்டால் வேறு மனிதனே இல்லை எனும் அளவுக்கு அப்பாவியாக நடித்திருக்கிறார் மோகன்லால். ஒரு குருட்டு தைரியம்… அதே நேரத்தில் தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பதைபதைப்பு… இவற்றிற்கு இடையே பதற்றம் இல்லாமல் ஒரு உடல் மொழியை வெளிப்படுத்த வேண்டும். அதை அப்படியே செய்திருக்கிறார் மோகன் லால்… அன்னைக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி என மீண்டும் இழுக்கும் போது அப்ளாஸ் அள்ளுகிறார்… லால் ஏட்டன் லால் ஏட்டம் தான்… பாவம் கமல் இரண்டாம் பாகம் எடுத்தால் இந்த அளவுக்கு நடிக்க வேண்டுமே…
ஒரு குற்றம் செய்துவிட்டோம்… அந்தக் குற்றத்தையும் மறைத்துவிட்டோம்… ஆனால், அதே தவிப்பில் இருக்கும் குழந்தைகளுடன் இருக்கும் தாய்க்குத்தான் அவர்கள் படும் வழியும் வேதனையும் புரியும். எங்கு சென்றாலும் யார் பார்த்தாலும் நம்மைத்தான் சொல்கிறார்களோ… அதற்காகத்தான் பார்க்கிறார்களோ என்று குறுகிப் போகும் இயல்பான குடும்பத் தலைவியாக மீனா அசத்தியிருக்கிறார்… அவரது கண் இப்போதும் நடிக்கிறது… 80’ஸ் கிட்ஸின் கனவுக் கன்னி இல்லையா…
மோகன்லாலின் மூத்தமகள் அன்ஸிபா, எஸ்தர் அனில் தவிர இந்தப் படத்தில் முரளி கோபி, அஞ்சலி நாயர் உள்ளிட்டோரும் புதிதாக நடித்துள்ளனர். அவர்கள் அளவில் இந்த திரைக்கதைக்கு ஏற்ற நடிப்பையே கொடுத்திருக்கிறார்கள்.
பெரிய அளவில் ஒளிப்பதிவுக்கு வேலை இல்லாத படம் தான் என்றாலும் மோகன்லாலின் ஊரை அட்டகாசமாக படம் பிடித்து காட்டுகிறார் சதீஸ் குரூப். த்ரில்லர் கதையை மேலும் சுவாரஸ்யம் ஆக்குவது அனில் ஜோசப்பின் பின்னணி இசைதான். இடையில் ஒரு தேவையில்லாத பாடல் என்றாலும் பின்னணி இசையில் விருவிருப்பை கூட்டத்தவறவில்லை…
கொஞ்சம் டீட்டெய்லாக நகரும் முதல் பாதி அதாவது ஒரு மணி நேரத்தைப் பொறுத்துக்கொண்டால் பிற்பாதியில் வரும் ஒன்றரை மணி நேரமும் அடிப்பொலி ட்விஸ்டுகளுடன் நம்மை ஆச்சர்யப்படுத்தும் இந்த த்ரிஷ்யம் – 2… நிச்சயம் தமிழில் எடுப்பார்கள் என்றாலும் ஒரு நல்ல சினிமா அனுபவத்திற்காக கட்டாயம் த்ரிஷ் – 2-வை அமேசான் ப்ரைமில் பார்த்துவிடலாம்.
விமர்சனம்
த்ரில்லர், பயம், காமெடி என எதும் உருப்படி இல்லாமல் மையமாக உருட்டியிருக்கிறார்… Live Telecast விமர்சனம்


தனியார் தொலைக்காட்சியில் Dark Tale என்ற பெயரில் ஒருவர் வாழ்க்கையில் நடந்த் த்ரில்லர் கதையை Reality Show-ஆக கொடுத்து வருகிறார்கள் ஜென்னி அண்ட் கோ (காஜல் அகர்வால், கயல் ஆனந்தி, வைபவ்). அந்த show-வின் டிஆர்பி குறைய ஆரம்பிக்கும் போது அதை நிறுத்த முடிவு செய்கிறது அந்த சேனல்.
அதன் பின் ஒரு இடத்தில் இருக்கும் பேயை Live Telecast செய்ய நினைத்து ஒரு வீட்டிற்குள் செல்கிறது ஜென்னி அண்ட் கோ. அங்கே இருக்கும் பேய் இது அண்ணனோட கோட்டை. ஒரு முறை நீங்க உள்ளே வந்துட்டா நானா நினைக்காம உங்களால வெளியில போக முடியாது என உள்ளே வைத்து மிரட்டுகிறது. (அப்படியெல்லாம் ஒண்ணும் மிரட்டவில்லை)… ஜென்னி அண்ட் கோ அந்த வீட்டுப் பேயிடம் இருந்து தப்பித்து வந்தார்களா? இல்லையா? என்பதை 7 எபிசோடுகளில் சொல்லிய்யிருக்கும் வெப் சீரிஸ் தான் இந்த Live Telecast…
சுருக்கமா சொல்லணும்னா பேயை நேரடியாகக் காட்ட நினைத்து உள்ளே போய் பேயிடம் மாட்டிக்கொள்ளும் தனியார் தொலைக்காட்சி குரூப் ஒன்று எப்படி அந்த பேயிடம் இருந்து தப்பி வந்தது என்பதை சொல்லும் தொடர் தான் இந்த Live Telecast…
Also Read: அதை மட்டும் சரியா பண்ணியிருந்தா C/O அட்டகாசம் ஆயிருக்கும்… C/O காதல் விமர்சனம்!
காஜல் அகர்வால், கயல் ஆனந்தி, வைபவ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோருடன் சில வெங்கட் பிரபு குரூப்புகளில் உள்ள ஆட்கள் மற்றும் சில புதுமுக நடிகர்களுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு…


Live Telecast
சென்னை 600028 இயக்குவதற்கு முன் இந்த கதையை எடுக்க நினைத்ததாக வெங்கட் பிரபு சொன்னதெல்லாம் சரிதான். அதற்காக அந்தக் கதையை அப்படியே தூசு தட்டி கொடுத்திருப்பது எந்த வகையில் நியாயம். பேய் படங்களின் மன்னன் ராகவா லாரன்ஸே கோபப்படும் அளவுக்கான ஒரு அதரப் பழசான கதை. காஞ்சனா பார்ட் – 2 இந்தக் கதைதான். ஆத்தாடி Spoiler சொல்லிட்டேனே.
பேய்க் கதைகள் எல்லாம் ஒரே கதைதான் என்றாலும் அதை சொல்லும் வகையில் பல படங்கள் நம்மை அசத்தியிருக்கின்றன. டெரர் பேய், ரொமான்ஸ் பேய், காமெடி பேய் என கோலிவுட்டில் பல பேய்கள் சுத்தியிருக்கின்றன. இவை அத்தனையும் வெங்கட் பிரபுவுக்கு வரும் தான். அதற்காக அவை எல்லாவற்றையும் ஒரே சீரிஸில் ட்ரை பண்ணிப் பார்க்க வேண்டுமா? சரி ட்ரை பண்றதெல்லாம் தப்பில்லை. அது ஒர்க் அவுட் ஆக வேண்டும் இல்லையா? அப்படி எதுவுமே ஒர்க் அவுட் ஆகாம சொதப்பியிருக்கிறார் இயக்குநர்.
வெப் சீரிஸ் என்பதற்காகவே பல காட்சிகள் நீண்டு கொண்டே செல்கின்றன என்பது சோதிக்கின்றது என்றால் பிரேம் ஜி-யின் பின்னணி இசை அதை விட நம்மைச் சோதிக்கின்றது. டெக்னிக்கலாகவும் இந்த சீரிஸில் பெரிய அளவில் சிறப்பாக அமையவில்லை. காஜல் அகர்வாலின் நடிப்பு மற்றும் வைபவின் வழக்கமான நடிப்பும் கொஞ்சமே கொஞ்சம் ஆறுதலாக இருக்கின்றன.
த்ரில்லர், பயம், காமெடி என எதுவுமே முழுமையாக இல்லாமல் மையமாகவே இறுதி வரை உருட்டியிருப்பதுதான் Live Telecast-இன் மிகப்பெரிய மைனஸ். உங்க கிட்ட இன்னும் எதிர் பார்க்கிறோம் மிஸ்டர் விபி @ வெங்கட் பிரபு…
விமர்சனம்
அதை மட்டும் சரியா பண்ணியிருந்தா C/O அட்டகாசம் ஆயிருக்கும்… C/O காதல் விமர்சனம்!


எல்லொருக்குள்ளும் பள்ளிப் பருவத்து காதல், கல்லூரி பருவத்துக் காதல், மிடில் ஏஜ் காதல், முதுமையில் காதல் என ஒவ்வொரு பருவத்துக்கும் உரிய காதல் உருவாகியிருக்கும். (முதிர் பருவ காதலை அனுபவதித்தது இல்லை என்றாலும் அந்த வயதுக்காரர்கள் சொன்ன காதல் கதையை நாம் கேட்டாவது இருப்போம்). அந்த காதல் அனைத்தும் அந்தந்த பருவத்துக்கே உரிய காதல் உணர்வுகளுடன் நம்மை கடந்து சென்றிருக்கும். அந்த அத்தனை காதலையும் ஒரு அட்டகாசமான ட்விஸ்ட்டோட சொல்லியிருக்கும் படம் தான் இந்த C/O காதல்…
2018-இல் தெலுங்குவில் வெளியான C/O கஞ்சிரபாளையம் என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் C/O காதல்… இந்த ரிவீவில் இரண்டு படங்களுக்குமான ஒற்றுமை வேற்றுமை என சொல்லப் போவதில்லை. உண்மையை சொல்லனும்னா நான் 2018-இல் பார்த்ததோட தமிழ் ரீமோக்கை பார்த்துதான் ஞாபகப்படுத்திக்கொண்டேன். இந்தப் C/O காதல்… தமிழில் எப்படி இருக்கு என்பதை இனி பார்ப்போம்.
C/O காதல்… அட்டகாசமான கதை… நல்ல திரைக்கதை, அதற்கு ஏற்றார் போல இசை… கதை களம்…
நான்கு கதையும் எந்தக் கதையுடனும் எதுவும் ஒட்டி வந்து பார்வையாளர்களை தொல்லை செய்யவில்லை துருத்தவும் இல்லை. மதுரையில் நடக்கும் கதைக்கான கூடுதல் சுவாரஸ்யத்தைக் கொடுப்பது இந்தப் படத்திற்கான இசை தான்.
எல்லாம் சரியாக அமைந்து விட்டது., கதாபாத்திரங்களின் தேர்வும் அட்டகாசம். ஒவ்வொரு பருவத்திற்குமான காதல் கதைகளின் ஆண், பெண் கதைபாத்திரங்கள் எல்லாம் சரியாக அமைந்துவிட்டன. அப்புறம் என்னதான் இந்தப் படத்தில் பிரச்னை என்கிறீர்களா? எல்லா கதாபாத்திரங்களின் நடிப்பும் நாடகத்தன்மையுடன் நடித்துள்ளார்கள். அதாவது ஆர்டிபீசியலாக இருக்கிறது. நடிக்கிறார்கள் என்பது அப்படியே தெரிகிறது. இதை மட்டும் தவிர்த்து இருந்தால் இந்தப் படம் நிச்சயம் ஒரு அட்டகாசமாக அனுபவமாக அமைந்திருக்கும். ஆனால், தெலுங்கு பட இயக்குநர் என்பதாலோ என்னவோ அப்படி அமைந்திருக்கலாம்.
Also Read: அந்த வீடியோவை பாத்துட்டு கதை எழுதிருப்பாங்க போல… பாரிஸ் ஜெயராஜ் விமர்சனம்!
நீண்ட நாளுக்குப் பிறகு முதல்மரியாதை தீபன் நடித்திருக்கிறார். இப்போது இருக்கும் ஆட்களுக்கு அவர் யார் என்றே தெரியாது. அந்த நிலாவத்தான் கையில பிடிச்சேன்”னு பாடியிருப்பாரே அவர்தான். இந்த அறிமுகம் எல்லாம் தேவையில்லைதான் என்றாலும் அவர் உண்மையில் அட்டகாசமாக நடித்திருக்கிறார்.
இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என அனைத்து மதங்களையும் விமர்சனம் செய்துள்ளது மட்டுமல்லாது, சாதி பற்றிய விமர்சனம், பெண்கள் சுதந்திரம் என அங்காங்கே படம் முழுவதும் பல சமூக அக்கறையுள்ள விஷயங்களையும் இயக்குநர் இணைத்திருப்பதும் ரசிக்கும்படியே இருக்கிறது. ஆனால், பொட்டை என்ற வார்த்தை மட்டும் பின்னணி இசை போல தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இதை தவிர்த்திருக்கலாமே பாஸ்.
பெரிய அளவில் அறிமுகம் இல்லாத நடிகர்களை வைத்து ஒரு அழகான கதையை கொஞ்சம் பிசகினாலும் சிக்கலுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள கதையை அட்டகாசமாக கொடுத்துள்ளது இந்தப் படக்குழு. காதலர் தினத்தில் பார்ப்பதற்கு ஒரு நல்ல பீல்குட் மூவி இந்த C/O காதல்…