விமர்சனம்
கைதி – ஒரு தரமான ஆக்சன் திரைப்படம்


ஒரு குறிப்பிட்ட திரை வகைமையினை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் திரைப்படங்கள் குறைவு. அதுவும் அக்குறிப்பிட்ட வகைமையிற்கு நியாயம் செய்யும் வகையில் ஒட்டுமொத்த திரைப்படமும் அமைவதும் குறைவு. இத்தகைய நிலையிலிருந்து ஒரு குறிப்பிட்ட வகைமையினை மட்டும் கொண்டு அதற்கு முழுக்க முழுக்க நியாயம் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது ‘கைதி’ திரைப்படம்.
இதற்கு முன் மாநகரம் என்னும் திரைப்படத்தின் படத்தின்வழி தனக்கெனத் தனி முத்திரையினைப் பதித்துக்கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இதிலும் தனது தனித்துவமான திரைமொழியின்வழி மீண்டும் தனது முத்திரையினைப் பதித்துள்ளார். குறிப்பிட்ட சூழல்கள்தான் ஒரு குறிப்பிட்ட நிகழ்வினைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று இந்த இயக்குநர் ஆழமாக நம்புகிறார் போலும். அதன்வழி இவரின் முதல் படம் ஒரு நகரத்தினுள் நிகழும் வேறுபட்ட நிகழ்வுகளில் சிக்குண்ட மனிதர்கள் ஒருவருக்கு மற்றொருவர் அவர்களை அறியாமலே உதவுவதை மையமாகக் கொண்டதாகும். அதேபோல் இத்திரைப்படதிலும் பல்வேறு தனித்தனியான நிகழ்வுகளின் கோர்வை ஒரு குறிப்பிட்ட நிகழ்வினைக் கட்டமைப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய அளவு கொண்ட போதைப்பொருளினைச் சிறப்பு காவல் பிரிவு கைப்பற்றுகிறது. அதனால் கைப்பற்றிய காவலர்களைக் கொல்லவும் போதைப்பொருளினை மீட்கவும் தீட்டம் தீட்டுகிறது போதைபொருள் கடத்தல் கும்பல். ஐஜியின் கெஸ்ட் ஹவுசில் நடக்கும் பார்டியில் உயர்அதிகாரிகள் அனைவரின் உயிருக்கும் சிக்கல் ஏற்படுகிறது. அவர்களைக் காப்பாற்ற 80கி.மீ. செல்லவேண்டும். அதற்கு உதவுகிறார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்து தனது மகளைப் பார்க்க வெளிவரும் கைதி. இவர்களை ஒரு குழுத் துரத்துகிறது.
மற்றொரு புறத்தில் போதைபொருள் வைத்திருக்கும் காவல்துறை அலுவலகத்தில் ஒரு கும்பல் தாக்க நெருங்குகிறது. அதனால் காவலர்கள் அனைவரும் காவல் நிலையத்தினை விட்டு வெளியேறிவிடுகின்றனர். அக்காவல் நிலையத்தில் புதிதாக வேலையில்சேர்ந்த கான்ஸ்டெபில் மட்டும் இருக்கிறார், இவருடன் ஐந்து கல்லூரி மாணவர்கள் ஒரு கேசுக்காக வந்துள்ளனர். இவர்கள் எவ்வாறு அக்காவல் நிலையதிற்கு வரும் பெரும் கும்பலைத் தடுத்தனர் என்பதும் கைதி தனது மகளைப் பார்த்தானா என்பதும் இப்படத்தின் மையக்கதை.
படத்தில் கதாநாயகி இல்லை, பாடல்கள் இல்லை என்று தெரிந்தபின்பு திரையரங்கினுள் வரும் பார்கையாளனை முதல் அரைமணி நேரத்தில் படத்திற்குள் இருக்கும் அனைத்து கதைப்போக்குகளையும் தெளிவாக எடுத்துரைத்து ஒரு நேர்கோட்டிற்குள் கொண்டுவந்துவிடுகிறார் இயக்குநர். அதன்வழி படத்தைப் பார்க்கும் பார்வையாளர் வேறுஎந்த சிக்கலும் இல்லாமல் தனது திரைமொழியினுள் இழுத்துச் சென்று தான் சொல்ல வருவதையும் காண்பிக்க முயன்றதையும் காண்பித்துப் பிரமிக்க வைக்கின்றார்.
படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடத்திருக்கின்றனர். அதேபோல் அனைத்து தொழிற்நுட்பப் பிரிவினரும் தனது பங்கினைச் சிறப்பாக ஆற்றியுள்ளனர்.
இப்படத்தில் இரண்டு முக்கியமான விசயங்கள் காணப்படுகின்றன. ஒன்று, ஒரு குறிப்பிட்ட சூழல்தான் ஒரு மாஸ் ஹீரோப் பிம்பத்தினைக் கட்டமைக்கின்றது. அச்சூழலினை எதிர்கொள்ளும் எந்த கதாபாத்திரமானாலும்சரி அந்த மாஸ் ஹீரோப் பிம்பத்தைப் பெற்றுவிடும் என்பதைப் பறைசாற்றுகிறது. அதன்படி இத்திரைப்படத்தில் கார்த்திக்கு மட்டுமல்லாது பல்வேறு கதாபாத்திரங்களுக்கும் மாஸ் சீன்கள் உள்ளன. அவற்றினைத் திரைக்கதைக்குள் இருக்கும் சுவாரஸ்சியம்தான் கட்டமைக்கின்றது, இதற்கு ஒளிப்பதிவும், இசையும் துணைபுரிந்து ஒரு மாஸ் சீனை உருவாக்குகின்றது.
இரண்டு, ஒரு சிறந்த கதை என்பது உணர்வுகளை அடிநாதமாகக் கொண்டிருக்க வேண்டும். எந்த வகைமை திரைப்படமாக இருந்தாலும் சரி அது கடத்த முயல்வது மனித உணர்வினை மட்டுமே. அதனைத் தெளிவாக கடத்திவிட்டால் போதும். மற்றவை அனைத்தும் அதன்மீது இயல்பாக படர்ந்துவிடும். இத்திரைப்படம் மகள் – அப்பா என்ற உறவி னை அடிதளமாகக் கொண்டுள்ளது. அதன் வெளிப்பாடும் சிறப்பாக அமைந்துள்ளது அதனால் அதன்மீது கட்டமைக்கப்பட்ட ஆக்சன் திரைக்கதை வலுவாக நிற்கின்றது.
இத்திரைப்படம் ஒரு தரமான ஆக்சன் திரைப்படமாகவும் பொழுதுபோக்குத் திரைப்படமாகவும் திருவிழாவிற்கு ஏற்றத் திரைப்படமாகவும் இருக்கின்றது.
விமர்சனம்
விவசாயிகளுக்கு ஆப்பு அடிக்க முயன்றிருக்கிறார் ஜெயம் ரவி… பூமி விமர்சனம்


இளம் வயதில் சிறிய செயற்கை கோள் செய்ய அதன் மூலம் நாசாவில் வேலை கிடைத்து பணியாற்றுகிறார் பூமிநாதன் (ஜெயம் ரவி). செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்து அங்கே மனிதர்களை குடியேற்றும் புராஜெக் செய்து வருபவருக்கு ஒருமாதம் லீவ் கிடைக்கிறது. லீவுக்கு சொந்த கிராமத்திற்கு செல்லலாம் என நினைத்து திருநெல்வேலியில் இருக்கும் தன்னுடையை ஊருக்கு வருகிறார் பூமிநாதன். அங்கே விவசாயிகள் படும் துன்பத்தை பார்த்து, அதை போக்க தானும் விவசாயம் செய்யலாம் என முடிவுசெய்கிறார்.
விவசாயம் செய்ய தொடங்கும் பூமி அவர்களின் துன்பத்திற்கு காரணம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் என்பதை தன்னுடைய விஞ்ஞான மூளை மூலம் கண்டுபிடிக்கிறார். பின்னர் சொந்தமாக விவசாயம் செய்யவிடாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரச்னைகளை ஏற்படுத்த, பூமிநாதன் அதில் இருந்து மீண்டுவர என்ன செய்கிறார், விவசாயிகளையும் விவசாயத்தையும் எப்படி காப்பாற்றுகிறார் பூமி படத்தின் கதை…
விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான ஒற்றை வரி கதை
ஒரு காட்சியில் கூட நம்பகத்தன்மை இல்லை. விவசாயம் பற்றிய தெளிவான புரிதல் இல்லை, விவசாயிகள் பிரச்னை பற்றி தெரியவில்லை, இயற்கை விவசாயம் என்றால் என்ன என்ற சின்ன அளவு கூட தெளிவு இல்லை. விவசாயம்… விவசாயம் என ரத்தம் தெரிக்க இயக்குநர் சொன்னதை விட கொஞ்சம் ஓவராகவே உணர்ச்சியை கொட்டி நடித்து தள்ளி விட்டார் ஜெயம் ரவி. பார்க்கவே சிரிப்பாக இருக்கிறது (கேளிச்சிரிப்பு).
டிஸ்கரி, சோனி பிபிசி மட்டும் இல்லை ஆங்கில சினிமாக்களிலேயே நல்ல தமிழில் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், வெளிநாட்டு அல்லது கார்ப்பரேட் வில்லன் என்றாலே தமிழ் சினிமா வில்லன் அறைகுறை தமிழில் தான் பேசுவார் என்ற ஆதிகாலத்து விசயத்தையே இங்கேயும் கொண்டுவந்துள்ளார் இயக்குநர். வில்லன் பேசும் போதெல்லாம் செம்மையாக கடுப்பு ஏறுகிறது.இமானின் இசையும் அவ்வளவு சிறப்பாக இல்லை.
விவசாயம் பற்றி பேச வந்து இலவச மின்சாரம் தேவையில்லை; கடன் தள்ளுபடி தேவையில்லை; டென்மார்க் நாடு விவசாயம் செய்தே முன்னேறி வருகிறது என விவசாயிகளுக்கு ஆப்பு அடிக்கவே இந்த பூமி முயற்சி செய்திருக்கிறது. விவசாயம் பற்றி வாட்சப்பில் வந்ததை தமிழன் என்றால் பார்வர்டு செய் ரக உணர்ச்சியில் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் லட்சுமணன். இவரது ரோமியோ ஜூலியட் மட்டும் தான் சுவாரஸ்யமான படம். போகன் ஒரு போங்கு… பூமி விவசாயிகளுக்கு அடிக்க வந்த ஆப்பு…
ஹார் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது (இதை ஏன் சொல்லுவானே உங்களையும் கஷ்டபடுத்துவானேனு பார்த்தேன்.)
விமர்சனம்
ஈஸ்வரன் சிம்பு கம்பேக்குக்கு உதவினாரா? – ஈஸ்வரன் விமர்சனம்


திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் பெரியசாமியின் (பாரதிராஜா) பெரிய குடும்பத்தில் வரும் பிரச்னைகளும் அந்தப் பிரச்னைகளை அவருக்குத் துணையாக இருக்கும் ஈஸ்வரன் (சிலம்பரசன்) எப்படித் தீர்க்கிறார் என்பதும்தான் கதை.
2019-க்குப் சிம்பு நடிக்கும் படம், சுசீந்திரன் இயக்கம், அதுவும் குறுகிய காலத்தில் எந்த பிரசனையும் இல்லாமல் சிம்பு ஷுட்டிங் முடிச்ச படம் என இந்த படம் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்த பல காரணங்கள் இருக்கின்றன.
பாரதிராஜா கொஞ்சம் ஓவராக நடித்தாலும் தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சில இடங்களில் அப்லாஸ் அள்ளுகிறார். உண்மையில் பாண்டிய நாடு படத்தில் பாரதிராஜா செம்மையாக நடித்திருப்பார். அந்த அளவு கனமான கதாபாத்திரமாக இவரது பாத்திரம் எழுதப்பட்டவில்லை தான். பாலசரவணன், முனிஸ்காந்த் வரும் சில காட்சிகளில் சிரிப்பு கொஞ்சமாக வர முயன்றது. அவ்ளோ தான்.
தமன் இசை… தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்து… இசை அமைத்து இப்படியா ஆகிவிட்டார் போல. படத்திற்கு முழு தெலுங்கு வாசனை தருகிறார் தன் இசை மூலம். சகிக்க முடியவில்லை. பாடல்… பின்னணி இசை… பில்டப் பிஜிஎம் ஏதும் காதில் ஏறவில்லை. ரத்தம் வராத குறைதான்.
திண்டுக்கல்லை மையமிட்டு கதை திரைக்கதை அமைத்த சுசீந்திரன் படங்கள் எல்லாம் செம்ம ஹிட். நமக்கு ஒரு கம்பேக் அதே மாதிரி இருக்கணும் என்று சிம்பு நினைத்திருக்கலாம். இந்த கதையை தேர்ந்தெடுக்கும் போது. ஆனால் அழுத்தம் இல்லாத கதை, திரைக்கதை மூலம் சிம்புவை மட்டும் இல்லை நம்மையும் ஏமாற்றி விட்டார். காட்சி, உறவுகளுக்குள் ஒரு வரும் சொத்து பிரச்னை, பழி வாங்க வில்லனுக்கு இருக்கும் காரணம், காதல் காட்சிகள் என ஒண்ணு கூட புதுசு இல்லை இந்தப் படத்தில். ஆனால் படம் மட்டும் நியூ ரிலீஸ்… கொடுமை…
படம் 2 மணி நேரம்… இண்ட்ரோ ஸீன் 20 நிமிடம்… கொரோனா ஸீன் 15 நிமிடம் (கொரோனா டெஸ்ட் எடுத்து இதயத்தில் இருக்கும் ஓட்டையை கண்டுபிடிக்கவும் செய்யலாம் போல. படத்தை பாருங்க புரியும்), வில்லனுக்கு ஒரு பிளாஷ் பேக்… ஹீரோவுக்கு ஒரு பிளாஷ் பேக் மொத்தம் 15 நிமிடம்… டீசரில் வந்துச்சே ஒரு பாம்பு ஸீன் அதுக்கு ஒரு 15 நிமிடம்… (இங்கையும் ஒரு மெடிக்கல் மிராக்கில்… பாம்பு கடிச்சி ரெண்டு சண்டை போட்டு மருத்துவமனை போனா ஒரே ஊசில ஒரு நிமிசத்தில குணம் ஆயிடுது) கிளைமாக்ஸ் ஒரு 20 ன் நிமிடம்… அப்புறம் பாட்டுக. இவ்ளோ தான் ஈஸ்வரன்.
பொழுது போகும்னு தியேட்டருக்கு போனா… அங்க எப்படி பொழுதை போக்குறதுன்னு உக்காந்திருக்க வச்சுட்டாரு இந்த ஈஸ்வரன். கொஞ்சம் பாத்து பண்ணியிருக்கலாம்… வேற என்ன சொல்ல… பாவம் சிம்பு… ஐயோ பாவம் நாம்…
நீண்ட நாளுக்கு பிறகு வருகிறோம். ரசிகனுக்காக… பெண் ரசிகைகளுக்காக நல்ல குடும்ப படத்தில் கம்பேக் கொடுக்கணும் நெனச்சது சரிதான். ஆனால் கதை… திரைக்கதை… அதை சரியா கொண்டு போகும் இயக்குநர் பத்தியும் யோசிச்சு இருக்கணும்.
விமர்சனம்
நல்ல மார்க் வாங்கி இருக்க வேண்டிய மாஸ்டர் பார்டரில் பாஸ் ஆகியிருக்கிறார்… மாஸ்டர் விமர்சனம்…!


சென்னையில் எப்போதும் குடி போதையில் அடாவடி செய்து கொண்டு திரியும் கல்லூரி ஆசிரியர் ஜான் துரைராஜ் (விஜய்) ஒரு சந்தர்ப்பத்தில் நாகர்கோவிலில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார். அங்கே சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு துன்புறுத்தப்படும் சிறுவன், வளர்ந்து பெரிய ரவுடியாக உருவாகியிருக்கிறான் பவானி (விஜய் சேதுபதி). தன் ரவுடிசத்திற்கு சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் சிறுவர்களையே பயன்படுத்திக்கொள்கிறான். அங்கு வரும் புதிய ஆசிரியரான ஜான் துரைராஜ் (விஜய்), பவானியை வீழ்த்தி எப்படி சிறுவர்களைக் காக்கிறார் என்பதுதான் மாஸ்டர்.
தொடர்ந்து அட்லீ படத்தில் நடத்தி வெறுப்பேற்றிக் கொண்டிருந்த விஜய் மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற அறிவிப்பு வந்ததும் அவரது ரசிகர்களுக்கு மட்டும் இல்லை காமன் ஆடியன்ஸ்-க்கும் பெரிய எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. மாநகரம் மாதிரி செம்ம திரைக்கதை, கைதி மாதிரி ஆக்ஷன் அட்டகாசம் என மாஸ்டர் டபுள் ட்ரீட் இருக்கு என்ற எதிர்பார்ப்பு வேறு.
ஜேடி என்ற கல்லூரி ஆசிரியராக விஜய் எப்படியும் ஒரு ஐம்பது வயது இருக்கும். ஆனால், அவ்ளோ இளமையா இருக்கிறார். முதல் பாதி முழுவதும் அவ்வளவு மெனரிசம். பாடி லாங்குவேச் என மனிதன் அட்டகாசம் செய்திருக்கிறார். வழக்கமான விஜயாக இல்லாமல் அசத்தியிருக்கிறார். சண்டை, டான்ஸ் என படம் முதல் பாதி முழுவதும் இவரே ஆக்கிரமிக்கிறார். பிற்பாதியில் சீர்திருத்த பள்ளிக்கு செல்லும் விஜய் தன்னுடைய குடி, அடாவடிகளை நிறுத்து வேறு ஒரு ஆளாக வந்து நிற்கிறார் மீசை இல்லாமல் அழகாக. ஒவ்வொரு பிரேமும் விஜய் ஸ்கிரீனை முழுமையாக ஆக்கிரமிக்கிறார். பேசியே வில்லன்களை திருத்தவும் செய்கிறார் (எல்லாம் எவ்ளோ பாத்திருக்கும். லோகேஷ் நீங்களுமா?)
பவானியாக விஜய் சேதுபதி நீண்ட நாளுக்கு பிறகு கொஞ்சம் நடித்திருக்கிறார். சின்ன சின்ன வசனங்கள், பார்வை, நடை, உடை மூலமே வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார். முதல் பாதியில் கொஞ்சம், இரண்டாம் பாதியில் கொஞ்சம் கடைசியில் வழக்கமான வில்லனாக ஹீரோவிடம் அடி வாங்குவதற்கு கொஞ்சம் மட்டுமே விஜய் சேதுபதியை பயன்படுத்தியிருக்கிறார் லோகேஷ். ஆனாலும், ஹீரோவுக்கு நெருக்கமானவங்களை கொலை செய்வது, மிரட்டுவது என அதே பழைய பாணி வில்லத்தனமும் செய்ய வைத்திருக்கிறார்.
இந்த படத்தை உண்மையில் போரடிக்காமல் கொண்டு செல்வது அனிருத்தின் இசை தான். விஜய்க்கும், விஜய் சேதுபதிக்கு பாரபட்சம் பார்க்காமல் பிஜிஎம் போட்டு அசத்திவிட்டார். பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்பதால் அதை தனியாக சொல்லவில்லை.இந்த படம் உண்மையில் மாணவர்களுக்கான அரசியல் புரிதல் வேண்டும், சிறார் குற்றங்களின் பின்னணி, அதற்கான காரணம், அவர்களை மீட்கும் வழி என புதிய ஒரு கதை களத்தை கையில் எடுத்துக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் நோக்கம் அதுவாக இல்லையா அல்லது ஹீரோவுக்காக மாற்றப்பட்டதா என தெரியவில்லை. நிறைய சண்டை காட்சி, அதிலே மாஸ் காட்சி, அதற்குள்ளே வில்லன், வில்லனுக்கு மாஸ் காட்சி என்று மட்டும் சுருங்கி விட்டது. உண்மையில் சுருங்கி இருக்க வேண்டியது எடிட்டிங்கில் தான். 3 மணி நேரம், சுவாரஸ்யம் இல்லாத அதும் ரசிகனின் பொறுமையை முழுமையாக சோதிக்கும் இரண்டாம் பாதியை அவ்ளோ நேரம் பார்ப்பது எல்லாம் கஷ்டமாத்தான் இருக்கு. லோகேஷ் கனகராஜின் சில க்ளிஜே காட்சிகளும் இருக்கின்றன. கமர்சியல் படங்களில் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது தான் என்றாலும் ஒரு அளவில்லாமல் லாஜிக் ஓட்டைகள் வேறு. உண்மையில் டிஸ்டிங்சன் வாங்கியிருக்க வேண்டிய மாஸ்டர் பார்டரில் பாஸ் செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
-
வேலைவாய்ப்பு1 day ago
யுபிஎஸ்சி-யில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்1 day ago
பொங்கலில் அதிக வசூல் எடுத்தது ‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ இல்ல… இதுதாங்க!
-
விமர்சனம்2 days ago
ஈஸ்வரன் சிம்பு கம்பேக்குக்கு உதவினாரா? – ஈஸ்வரன் விமர்சனம்
-
விமர்சனம்1 day ago
விவசாயிகளுக்கு ஆப்பு அடிக்க முயன்றிருக்கிறார் ஜெயம் ரவி… பூமி விமர்சனம்