விமர்சனம்
போர்டு வி பெர்ராரி (Ford v Ferraari)… இந்த வார ரேஸில் வெற்றி பெற்றது போர்டு வி பெர்ராரி தான்…


1960களில் போர்டு கம்பெனி கார்கள் விற்பனையில் மிகப்பெரிய சரிவை சந்திக்கிறது. அப்போது போர்டு கம்பெனியின் தலைவர் தன்னுடைய ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். மூன்று நாட்கள் கால அவகாசம். அதற்கு புதிய ஐடியாவோடு வருபவர்களுக்கே போர்டு கம்பெனியில் வேலை. அப்படி ஐடியா இல்லாதவர்களுக்கு வேலை இல்லை.
வீட்டிலேயே இருந்துகொள்ளலாம் என. மூன்றாவது நாளில் அதன் மார்கெட்டிங் மேனாஜர் போர்டு கம்பெனி தன்னை காலத்திற்கு ஏற்ற மாதிரி புதுப்பித்துக்கொள்ளவில்லை. அப்போது விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் பெர்ராரி கம்பெனியின் வெற்றிக்குக் காரணம் அவர்களின் ஸ்போர்ட் கார்கள் தான். எனவே போர்டு கம்பெனியை பெர்ராரியுடன் இணைத்துவிடலாம் என்ற ஐடியா தருகிறார். அதற்கான முயற்சியில் போர்டு கம்பெனியை பெர்ராரி கம்பெனி நிராகரித்துவிடுகிறது. அவமானப்படுத்துகிறது. அப்புறம் என்ன நம்ம தலைவர் ரஜினி பாணிதான். அசோக் இந்த நாளை உன் காலண்டரில் குறித்து வைத்துக்கொள் என்று போர்டு கம்பெனி ரேஸ் கார் தயாரிக்க முடிவு எடுக்கின்றது. அதுமட்டுமல்ல அந்த ஆண்டு பிரான்சில் நடைபெறும் 24 மணி நேர லே மேன்ஸ் என்ற ரேசில் வெற்றி பெற வேண்டும் என்றும் முடிவு எடுக்கிறது. போர்டு ஸ்போர்ட்ஸ் கார் தயாரித்தார்களா? லே மேன்சில் வெற்றி பெற்றார்களா? மேட் டேமன், கிரிஸ்டின் பேலின் பங்கு என்ன என்பது தான் போர்டு வி பெர்ராரி கதை…


This image released by 20th Century fox shows Christian Bale in a scene from “Ford v. Ferrari,” in theaters on Nov. 15. (Merrick Morton/20th Century Fox via AP)
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்திருக்கும் படம். 1960களில் நடக்கும் படம்… ஆரம்பம் முதலே ஒரு பரபரப்பு படத்தில் இருந்து ஆடியன்சுக்கு தொற்றிக் கொள்கிறது. அது இறுதிவரை நீடிக்கிறது. ரேஸ்… அதில் நடக்கும் அரசியல் என படம் நம்மை முழுவதுமாக ஆட்கொள்கிறது…
லே மேன்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற ஒரே அமெரிக்கனாகக் காரல் ஷெல்பியாக நடித்திருக்கிறார் மேட் டேமன். ரேசில் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து அதனால் நடக்கும் விபத்தில் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு ரேஸ் ஓட்டமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார். ரேசில் இருந்து வெளியேறி ரேஸ் கார் விற்பனை செய்யும் தொழிலை நடத்துகிறார். இயல்பான நடிப்பு. இதுபோல பல படங்களில் நடித்தவருக்கு இது அவ்வளவு பெரிய சவாலான பாத்திரம் இல்லைதான்.
கென் மைல்ஸ் ஆக கிரிஸ்டின் பேல்… இதெல்லாம் ஒரு பாத்திரமான அவருக்கு என்றாலும் மனிதன் தன்னுடைய முழு திறனை அதில் காட்டியுள்ளார். ராணுவத்திலிருந்து வந்து கார் மெக்கானிக்காக இருக்கும் கிரிஸ்டின் பேல் லோக்கல் ரேஸ்களில் தன்னுடைய மகனுடன் சென்று பங்கு பெற்று வருகிறார். தன் மகன் மீது பாசம் காட்டும்போது, மனைவி மீது காதலால் உருவாகுவது, போர்டுக்காக தான் தயாரித்த காரை நீண்ட பயிற்சி எடுத்ததை தான் ஓட்ட முடியாது என வரும்போது ஏமாற்றாத்தை என மனிதனுக்கு நடிக்க பல வாய்ப்புகள். அத்தனையிலும் 7000 மைல் வேகத்தில் செல்கிறார். அவ்வளவு அட்டகாச அலாட்டான நடிப்பு.
மேட் டேமன்… கிரிஸ்டின் பேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் கார் தான் போர்டு கம்பெனிக்கு லே மேன்ஸ் ரேசில் வெற்றியை பெற்றுத்தருகிறது. ஆனால், இதற்கு இடையில் வழக்கமான சில துரோகங்களும் நடக்கின்றன.
படத்தில் மூன்று ரேஸ் காட்சிகள் இருக்கின்றன. மூன்றும் அட்டகாசம். அவ்வளவு விருவிருப்பு… படத்திற்கு ஏற்ற இசை… இதன் மற்றொரு பலம்… ஒட்டுமொத்த படத்தையும் மேட் டேமனுடன் சேர்ந்து கிரிஸ்டின் பேல் தாங்கி நிலை நிறுத்துகிறார்.
இயக்கம் லோகன், வூல்வரின் படங்களை இயக்கிய ஜேம்ஸ் மேன்கோல்டு… இதைவிட இயக்கம் பற்றி வேறு என்ன சொல்ல முடியும். அந்த இரண்டு படங்களைப் போலவே ஆக்ஷன், செண்டிமெண்ட் என அசத்தியிருக்கிறார்.
படத்தில் குறை என்று எதுவும் எனக்கு தெரியவில்லை. நல்ல ஆக்ஷன் பட ரசிகர் என்றால் இந்தப் படம் நிச்சயம் உங்களை கவரும். தமிழ்நாட்டில் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் வெளியாகவில்லை. அதனால் இதன் டார்கெட் ஆடியன்ஸை இந்தப் படம் நிச்சயம் பெரிய அளவில் திருப்திபடுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
விமர்சனம்
ஆண் முகத்தில் சாட்டையை வீசியிருக்கிறது… The Great Indian Kitchen விமர்சனம்…


திருமணம் ஆகிச் செல்லும் ஒரு பெண் தன் கணவன் வீட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறாள். அல்லது என்ன செய்ய வைக்கப்படுகிறாள். அவளது எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதையும் அந்த கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்தில் இருந்து மீள அவள் எடுத்த முடிவு என்ன என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் படம் தான் The Great Indian Kitchen என்ற மலையாளப் படம்.
எப்போது ஒரு சின்ன ஒன்லைனை வைத்துக்கொண்டு அட்டகாசமாக படமாக்கும் பல இயக்குநர்கள் மலையாளத்தில் உண்டு என்பதற்கு மற்றுமொரு உதாரணம் தான் ஜோ பேபியின் இந்த The Great Indian Kitchen.
நல்ல திறமையான டான்ஸ் ஆடும் பெண் திருமணம் ஆகிச் செல்கிறாள். அன்றைய நாளில் இருந்து தினமும் காலையில் எழுந்து வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது… வீட்டு வேலைகளை செய்வது… இது இரண்டை தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை என்ற நிலையில் வாழ்கிறார். அதுதான் பெண்ணின் கடமை, குடும்பத்திற்காக வாழ்வதுதான் பெண்ணிற்கு படைக்கப்பட்ட உன்னதமான வாழ்க்கை என்று ஆண்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
நாயகி மட்டுமல்ல, அவள் பேசும், சந்திக்கும் அனைத்து பெண்களும் சமைப்பது, வீட்டு வேலைகளை செய்வதைப் பற்றி மட்டும்தான் பேசுகிறார்கள். தன் செருப்பை கூட தான் எடுத்து போட்டுக்கொள்ளாத ஆண்கள் தான் இங்கே இருக்கிறார்கள் என்பதை சொல்கிறது.
நாகரீகம், அறிவியல், பண்பாடு என பலதரப்பட்ட வகையில் இந்திய சமூகம் வளர்ந்துவிட்டாலும்
பெண் சுதந்திரம், பெண்கள் முன்னேற்றம், பெண்ணிய சிந்தனை எனப் பேசும் பல முற்போக்குவாதிகளும் பெண்களை ஒரு சடப் பொருளாகத்தான் நினைக்கிறார்கள் என்பதை மீண்டும் அழுத்தமாக சொல்லியிருக்கிறது The Great Indian Kitchen.
நாயகியாக நிமிஷா சசயன் சோறு ஆக்குவது, வீட்டை சுத்தம் செய்வது, வீட்டுக் கழிவுகளை அகற்றுவது, கணவனுக்கு தோணும் போது அவன் விருப்பப்படி செக்ஸ் வைத்துக்கொள்வது என வாழும் பெண். அவற்றை சகித்துக்கொண்டு ஒரு சராசரி இந்திய பெண்ணின் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனாக சூரஜ் வெஞ்சரமூடு… ஒட்டுமொத்த ஆண்களின் உருவமாக நிற்கிறார். அவரது பாத்திரம் மீது வெறுப்பு உருவாகும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கிறது.
தொடர்ந்து வரலாற்றில் பெண்களுக்கான இடம் பற்றி பேசிக்கொண்டே வருகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கான இடம் என்ன என்பதில் இன்னும் பலருக்கும் ஒரே கருத்துதான் உள்ளது. இந்த லட்சனத்தில் கமல்ஹாசன் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு சம்பளம் என்று வேறு சொல்கிறார். இதெல்லாமுமா வளர்ச்சி.
உண்மையில் பெண்களை புரிந்துகொண்ட சமூகம் இன்னும் உருவாகவில்லை. இனியும் உருவாகப் போவதில்லை. பெண்களுக்கான வழிகளை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அது ஆணதிகார மையத்திடம் இருந்து ஒரு சின்ன அளவும் கிடைக்கப் போவதில்லை. ஆண்கள், ஆணகளால் கட்டமைக்கப்பட்ட இந்த சமூகம் எப்போதும் பெண்களை போகப் பொருளாக, வீட்டு வேலை செய்யும் ஒரு கருவியாக மட்டுமே பார்க்கும் என்பதை ஆண்களின், சமூகத்தின் முகத்தில் அறைந்தார் போல சொல்லியிருக்கும் மற்றொரு படைப்புதான் The Great Indian Kitchen.
கட்டாயம் அனைத்து ஆண்களும் பார்க்க வேண்இய படம் இந்த The Great Indian Kitchen. நிச்சயம் ஒரு நல்ல சினிமா பார்த்த உணர்வைக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை…
விமர்சனம்
இன்னும் எத்தனை படங்கள் இப்படி?… புலிக்குத்தி பாண்டி விமர்சனம்


ஊருக்குள் அடிதடி செய்துகொண்டு வேலை வெட்டி இல்லாமல் முடி வெட்டக் கூட நேரம் இல்லாமல் சுற்றித்திரிகிறார் கதாநாயகன் புலிக்குத்தி பாண்டி (விக்ரம் பிரபு). அப்பாவி அப்பா மற்றும் குடிகார, சூதாடியாக திரியும் இரண்டு அண்ணன்களின் பாவப்பட்ட குடும்பத்தை தன் சொந்த உழைப்பால் தூக்கி நிறுத்திக்கொண்டிருக்கிறார் பேச்சியம்மாள் (லட்சுமி மேனன்). ஊருக்குள் வட்டிக்கு விடுவது… வட்டிக்குப் பதில் சொத்தை அல்லது வட்டிக்கு வாங்கியவர்களின் குடும்ப பெண்களை எழுதி வாங்குவது… இல்லை என்றால் தன் சின்ன மகன் சரவெடி (ஆர்.கே.சுரேஷ்) மூலம் அவர்களை கழுத்திலேயே வெட்டுவது, அவனை காப்பாற்ற தன் அடுத்த மகன் டிஎஸ்பி சங்கையாவை (அருள் தாஸ்) பயன்படுத்துவது என வாழ்ந்து வருகிறார் சன்னாசி (வேல ராமமூர்த்தி). இந்த மூன்று வித்தியாசமான குடும்பங்கள் ஒரு மையத்தில் இணைகின்றன. ஏன்… எதற்காக… எப்படி என்பதை 500 டெசிபல் சத்தத்திலும் 1,000 லிட்டர் ரத்தத்திலும் சொல்லியிருக்கும் படம் தான் இந்த புலிக்குத்தி பாண்டி…
முந்தைய முத்தையா படங்களுக்கும் இதுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அதை கடைசியில் சொல்கிறேன்.
தன்னுடைய படங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியை மையமிட்டதாகத்தான் இருக்கும் என்று முத்தையா முன்னரே சொல்லிவிட்டதால் அதைப் பற்றியும் இங்கே இனி சொல்லப்போவதுமில்லை.
புலிக்குத்தி பாண்டியாக விக்ரம் பிரபு. பாதி முகத்தை தாடியும் தலை முடியும் மறைத்துக்கொள்ள மீதம் இருக்கும் கொஞ்சூண்டு இடத்தில் உணர்ச்சிகளை காட்ட முயற்சி செய்திருக்கிறார். மற்றபடி முத்தையாவின் வழக்கமான ஹீரோதான் இந்த புலிக்குத்தி பாண்டி. எந்த வித்தியாசமும் இல்லை. அதே போலத்தான் நாயகி லட்சுமி மேனன் கதாபாத்திரமும் மற்ற துணை கதாபாத்திரங்களையும் எழுதியிருக்கிறார்.
வில்லனாக சன்னாசி. ஊர்க்கார வில்லன் என்றாலே வேலராமமூர்த்தி, அருள் தாஸ், ஆர்.கே.சுரேஷ்-ஐ முதல்ல புக் பண்ணுங்கப்பா என்று சொல்லும் அளவுக்கு உருவாகிவிட்டார்கள். ஒரே பெண்ணுடன் குடும்பமே உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக எழுதியிருக்கிறார்.
கதைக்களம், நடிகர்கள், கதை, வசனம், பாடல்கள் என அனைத்தும் தன்னுடைய முதல்படத்தில் இருந்தது போலவே அமைத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.
என்.ஆர்.ரகுநாதனின் இசையிலும் எந்த புதுமையும் இல்லை. கரிசல்காட்டு சாலைகளை, ஊர்களை வேல்ராஜ் கொஞ்சமேனும் அழகாக காட்டியிருக்கிறார்.
என்னடா தொடர்ந்து முத்தையாவை பற்றியே பேசியிட்டுருக்கீங்கன்னு கேட்கிறீங்களா? ஒரு படம் எப்படி இருக்க வேண்டும் இருக்கிறது என்பது இயக்குநர் கையில் தான் இருக்கிறது. சில படங்களில் கதை நன்றாக இருந்து நடிகர்கள் சொதப்பிவிடுவார்கள். அது ரொம்பவே குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் முத்தையா சொன்னதை நடிகர்கள் உண்மையில் கட்சிதமாகவே செய்திருக்கிறார்கள்.
ஒரே மாதிரியான படங்கள் தான் என்றாலும் சி சென்டர் ஆடியன்ஸை முத்தையா எப்போதும் திருப்தி செய்து விடுகிறார். புலிக்குத்தி பாண்டியிலும் சாத்தியம் ஆகியிருக்கிறது என்பதுதான் உண்மை. அதற்கு இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் புலிக்குத்தி பாண்டிக்கு வந்த பார்வையே சாட்சி.
ஹீரோவை பழிவாங்க அவனது குடும்பத்தை பழிவாங்கும் வில்லனை பழிவாங்குவான் ஹீரோ. ஆனால், இந்த படத்தில் வில்லன் ஹீரோவை கொலை செய்துவிட வில்லனை குடும்பமே சேர்ந்து பழிவாங்கும் படி செய்திருக்கிறார் முத்தையா… (எப்புடி… கதையில் செம்ம வித்யாசம்ல)
விமர்சனம்
விவசாயிகளுக்கு ஆப்பு அடிக்க முயன்றிருக்கிறார் ஜெயம் ரவி… பூமி விமர்சனம்


இளம் வயதில் சிறிய செயற்கை கோள் செய்ய அதன் மூலம் நாசாவில் வேலை கிடைத்து பணியாற்றுகிறார் பூமிநாதன் (ஜெயம் ரவி). செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்து அங்கே மனிதர்களை குடியேற்றும் புராஜெக் செய்து வருபவருக்கு ஒருமாதம் லீவ் கிடைக்கிறது. லீவுக்கு சொந்த கிராமத்திற்கு செல்லலாம் என நினைத்து திருநெல்வேலியில் இருக்கும் தன்னுடையை ஊருக்கு வருகிறார் பூமிநாதன். அங்கே விவசாயிகள் படும் துன்பத்தை பார்த்து, அதை போக்க தானும் விவசாயம் செய்யலாம் என முடிவுசெய்கிறார்.
விவசாயம் செய்ய தொடங்கும் பூமி அவர்களின் துன்பத்திற்கு காரணம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் என்பதை தன்னுடைய விஞ்ஞான மூளை மூலம் கண்டுபிடிக்கிறார். பின்னர் சொந்தமாக விவசாயம் செய்யவிடாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரச்னைகளை ஏற்படுத்த, பூமிநாதன் அதில் இருந்து மீண்டுவர என்ன செய்கிறார், விவசாயிகளையும் விவசாயத்தையும் எப்படி காப்பாற்றுகிறார் பூமி படத்தின் கதை…
விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான ஒற்றை வரி கதை
ஒரு காட்சியில் கூட நம்பகத்தன்மை இல்லை. விவசாயம் பற்றிய தெளிவான புரிதல் இல்லை, விவசாயிகள் பிரச்னை பற்றி தெரியவில்லை, இயற்கை விவசாயம் என்றால் என்ன என்ற சின்ன அளவு கூட தெளிவு இல்லை. விவசாயம்… விவசாயம் என ரத்தம் தெரிக்க இயக்குநர் சொன்னதை விட கொஞ்சம் ஓவராகவே உணர்ச்சியை கொட்டி நடித்து தள்ளி விட்டார் ஜெயம் ரவி. பார்க்கவே சிரிப்பாக இருக்கிறது (கேளிச்சிரிப்பு).
டிஸ்கரி, சோனி பிபிசி மட்டும் இல்லை ஆங்கில சினிமாக்களிலேயே நல்ல தமிழில் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், வெளிநாட்டு அல்லது கார்ப்பரேட் வில்லன் என்றாலே தமிழ் சினிமா வில்லன் அறைகுறை தமிழில் தான் பேசுவார் என்ற ஆதிகாலத்து விசயத்தையே இங்கேயும் கொண்டுவந்துள்ளார் இயக்குநர். வில்லன் பேசும் போதெல்லாம் செம்மையாக கடுப்பு ஏறுகிறது.இமானின் இசையும் அவ்வளவு சிறப்பாக இல்லை.
விவசாயம் பற்றி பேச வந்து இலவச மின்சாரம் தேவையில்லை; கடன் தள்ளுபடி தேவையில்லை; டென்மார்க் நாடு விவசாயம் செய்தே முன்னேறி வருகிறது என விவசாயிகளுக்கு ஆப்பு அடிக்கவே இந்த பூமி முயற்சி செய்திருக்கிறது. விவசாயம் பற்றி வாட்சப்பில் வந்ததை தமிழன் என்றால் பார்வர்டு செய் ரக உணர்ச்சியில் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் லட்சுமணன். இவரது ரோமியோ ஜூலியட் மட்டும் தான் சுவாரஸ்யமான படம். போகன் ஒரு போங்கு… பூமி விவசாயிகளுக்கு அடிக்க வந்த ஆப்பு…
ஹார் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது (இதை ஏன் சொல்லுவானே உங்களையும் கஷ்டபடுத்துவானேனு பார்த்தேன்.)
-
வேலைவாய்ப்பு2 days ago
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு!
-
விமர்சனம்2 days ago
இன்னும் எத்தனை படங்கள் இப்படி?… புலிக்குத்தி பாண்டி விமர்சனம்
-
வேலைவாய்ப்பு2 days ago
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!