விமர்சனம்
டாக்டர் ஸ்லீப் விமர்சனம்… (Doctor Sleep) பெயரை பார்த்து கொஞ்சம் உஷாராகியிருக்கவேண்டும்…

நல்லவர்கள் மரண பயத்தில் எழுப்பும் கூச்சலில் வரும் ஆவியை உறிஞ்சி உயிர்வாழ்கிறது ஒருகூட்டம். அப்படி கொலை செய்ய முடியாத அளவு சிறப்பு சக்திகளை உடையவர்களை தங்கள் ஆவி குடிக்கும் கூட்டத்தில் சேர்த்துக்கொள்கிறது அந்தக் கூட்டம். அந்தக் கூட்டத்தை மிக அதிக சிறப்பு சக்தி உடைய ஒரு சிறுமியுடன் சேர்ந்து நடுத்தர வயதுடைய ஒருவர் எப்படி அழிக்கிறார் என்பது தான் டாக்டர் ஸ்லீப். பெயருக்கும் கதைக்கும் தொடர்பு இல்லையே என்று கேட்கக் கூடாது.
ஸ்டீபன் கிங் எழுதிய டாக்டர் ஸ்லீப் என்னும் நாவலினை மையமாகக் கொண்டு அதே பெயரில் இந்தப் படம் வெளியாகி உள்ளது. ஸ்டீபன் கிங் எழுதி ஸ்டேன்லி குப்ரிக்கால் இயக்கப்பட்ட ‘தி ஷைனிங்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக 38 ஆண்டுகளுக்குப்பிறகு இது வெளிவந்துள்ளது.
தி ஷைனிங் திரைப்படத்தில் சிறுவனாக இருந்த டானுக்கு சில சக்திகள் இருக்கும். அதை ‘ஷைன்’ என்று குறிப்பிடுவர். அதைக்கொண்டு தீய சக்திகளைச் ஒரு பெட்டிக்குள் அடக்கி தனக்கு உள்ளே வைத்துக்கொள்கிறான். இந்தப் படம் தீய சக்திகளை டான் டோரன்ஸ் (Dan Torrance) சிறு பெட்டிக்குள் அடக்குவதுடன் தொடங்குகின்றது.
மற்றொரு புறத்தில் டான்யைப் போன்ற ‘ஷைன்’ சக்தியினைக் கொண்ட பல்வேறு சிறுவர்களைப் பிடித்து அவர்களுக்கு வலி உண்டாக்கி அவர்கள் கத்தும்போது அவர்களின் ‘ஷைன்’ என்னும் சக்தியை குடித்தால் நீண்ட நாள் வாழலாம் ஒரு குழு தொடர்ச்சியாக ‘ஷைன்’ திறன் கொண்ட சிறுவர்களை கொலை செய்து அவர்களது வலிகளை குடித்து உயிர் வாழ்கின்றனர் ரோஸ் அன்ட் ஹேட். தலைமையிலான ‘ட்ரு நாட்’குழுவினர்.
டான் தனது அன்னை இறந்த பிறகு குடிபோதைக்கு ஆளாகி ஊர் ஊராகத் திரிகிறார். இறுதியாக ஓர் இடத்தில் தங்கியிருக்கும்போது அவரைப் போன்றே ‘ஷைன்’ திறன் கொண்ட ஒரு சிறுமியின் நட்பு கிடைக்கின்றது. அச்சிறுமியின் ‘ஷைன்’ திறனை எடுத்துக்கொள்ள ‘ட்ரு நாட்’ குழு முயல்கின்றது. அவர்களிடமிருந்து அச்சிறுமியினை டான் எவ்வாறு காப்பாற்றுகிறார். அந்த ஆவி குடிக்கும் ஆவிகளை எப்படி அழிக்கிறார் என்பதே படத்தின் பிற்பாதி கதை.
நல்லவேளை பாடம் ஹாரர் வகையைச் சேர்ந்தது என்று முன்னரே சொல்லிவிட்டார்கள். ஆனால் என்ன சோகம் அப்படிச் சொல்லியும் நமக்கு ஒரு இடத்தில் கூட திக் வரவில்லை. கடுப்புதான் வந்தது. எப்படா பயம் காட்டுவீர்கள் என்று. அந்த அளவிற்கு படம் சுமாராக இருந்தது. ரொம்ப மெதுவாகவும் சென்றது.
இத்திரைப்படத்தின் முக்கியமான அம்சம், 1980ஆம் ஆண்டில் வெளியான கிளாசிக் திரைப்படமான ‘தி ஷைனிங்’ படத்தின் முக்கிய காட்சிகளும் இசையும் இதில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருப்பதாகும். ‘தி ஷைனிங்’ திரைப்படத்தில் நடித்தவர்கள், இடம், இசை முதலியவை இத்திரைப்படத்தில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றனர். இத்தன்மை இத்திரைப்படத்தினை வேறொரு நிலைக்கு இட்டுச்செல்கிறது. பதபதைக்க வைக்கின்றது.
மிகவும் சக்திவாய்ந்த ரோஸ் அன்ட் ஹேட் என்னும் ‘ட்ரு நாட்’ குழுவின் தலைவி அச்சிறுமியினைச் சந்திக்க செல்லும் காட்சியும், பனிபடர்ந்த மலைப்பாதையில் கார் செல்லும்போது போடப்பட்ட பின்னணி இசையும் போன்ற சில செயல்கள் பிரமிப்பை ஏற்படுத்த தவறவில்லை.
ஆரம்பம் முதலே மெதுவாக சென்ற படம். பேசாமல் ‘டாக்டர் ஸ்லீப்’ என்று வைத்தற்கு பதிலாக ‘ஆடியன்ஸ் ஸ்லீப்’ என்று வைத்திருக்கலாம். ஒருவேளை படத் தலைப்பை நாம் தான் தவறாக புரிந்துகொண்டோமோ என்னவோ… என்னத்த சொல்ல…
சினிமா
இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…

இரண்டாம் உலகப் போரின்போது மும்பை வரும் சரக்கு கப்பல் நடுக்கடலில் விபத்துக்குள்ளாகிறது. அப்போது அதில் இருந்த பயணிகள் உட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குண்டுகள் கடலில் மூழ்கிவிடுகின்றன. அப்படியான குண்டுகளை அப்புறப்படுத்துவதாக இந்திய நிறுவனமும் அமெரிக்க நிறுவனமும் 2000 கோடியை ஊழல் செய்து அவற்றை நடுக்கடலில் கொட்டி விடுகின்றனர் அந்தக் குண்டுகள் அவ்வப்போது அலைகளால் அடித்து வரப்பட்டு வெடிக்கின்றன. சில குண்டுகளை மக்கள் கப்பலின் பாகங்கள் என நினைத்தும் இரும்பு என நினைத்தும் உடைக்கும்போது அவை வெடித்து விபத்து நடக்கின்றன. அப்படி நடக்கும் விபத்தில் 10 கி.மீ. தூரமும் 2000க்கும் மேற்பட்ட. மக்களும் இறக்கின்றனர். அப்படி ஒரு குண்டு மாமல்லபுரம் கடற்கரையில் ஒதுங்குகிறது. அதை இரண்டு கூட்டம் தேடுகிறது. குண்டு வெடித்ததா இல்லையா என்பதை தியேட்டரில் பார்த்துக்கொள்ளலாம்.
நல்ல கதை, நல்ல நடிகர்கள் இருந்தும் சில நேரம் சுவாரஸ்யம் இல்லாத அல்லது திசை மாறும் திரைக்கதைகளால் சில படங்கள் கொஞ்சம் மோசமாகிவிடும் வாய்ப்பு உருவாகும். அப்படியான ஒரு படம்தான் இந்த படம்.
குண்டை கைப்பற்றி ஊழலை மறைக்க நினைக்கும் ஒரு கும்பல்… குண்டை கண்டுபிடித்து ஊழலை வெளிக்கொண்டுவரும் ஒரு கும்பல்… இவர்கள் இருவருக்குள்ளும் மாட்டிக்கொண்ட நாயகன்… என்ன எப்படி என ஒரு நல்ல சேஜிங் படமாக உருவாகியிருக்க வேண்டியது…
காய்லாங்கடை தொழில்… அங்கு நடக்கும் உழைப்பு சுரண்டல்… அந்த மக்களின் வாழ்க்கை… அவற்றுக்குள் கதாநாயகனின் செயல்கள் என இப்படி யாருமே தொடாமல் விட்டிருந்த புத்தம் புதிய கதைக்களம்… சொல்ல எவ்வளவோ சொல்லியிருக்க வேண்டிய படம்…
இடைநிலை சாதி பெண்ணை காதலிக்கும் தலித் இளைஞர்… அதில் நடக்கும் சிக்கல்… அந்த கிராம மக்களின் வாழ்வியல்… அதில் உள்ள கூத்து கலை… பண்பாடு… என உருவாகியிருக்க வேண்டிய படம்… இது புதிய கதை இல்லைதான் என்றாலும் விழுப்புரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை மையமிட்டு அங்குள்ள சாதிய அரசியலை பேசி ஒரு படம் வரவே இல்லை. அதனால் இதுவும் நிச்சயம் புதிய களமாக அமைந்திருக்கும்… அமைந்திருக்க வேண்டிய படம்…
ஆனால், இத்தனை விஷயங்கள் இருந்தும் இந்தப் படம் சருக்கும் இடம் இவை மூன்றையும் ஒரே கதைக் களத்துக்குள் கொண்டுவந்து ஒன்றையும் தெளிவாகச் சொல்லாமல் செல்வதுதான்.
படம் ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே அட ஒரு அருமையான படத்துக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்திய இயக்குநர் அடுத்தடுத்து பெரிய ஏமாற்றங்களை கொடுக்கிறார்.
ரஞ்சித் தன்னுடைய அத்தனை நடிகர்களையும் இதிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள்… அட்டக்கத்தி தினேஷ் லாடி ஓட்டுநராக பாடி லாங்குவேஜ், பேச்சு, லுக் என என அட்டகாசமாக பொருந்தியிருக்கிறார்… கயல் ஆனந்தி, ரக்ஷிதா, ராமதாஸ் @ முனீஷ்காந்த்… இவர்கள் நான்கு பேரும் கதையில் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளனர். மற்றவர்கள் எல்லோரும் வருகிறார்கள்… போகிறார்கள்…
இசை தென்மா… முதலில் குண்டுக்கு போடும் பின்னணி, இறுதியில் வரும் ஒரு பாடலுக்கான கிராமிய இசை தவிர மற்ற இடங்களில் பெரிதாக ஒட்டவில்லை… இன்னும் தனியிசையில் மட்டுமின்றி திரையிசையிலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறோம்…
அதிரன் ஆதிரை… கதை தேர்வு, பாத்திரங்கள் தேர்விலும், சில காட்சிகளிலும் முத்திரை பதிக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் நிச்சயம் ஒரு சிறப்பான திரைக்கதையுடன் ஒரு அட்டகாசமான கதையை எதிர்பார்க்கலாம். என்ற நம்பிக்கை இருக்கிறது… காத்திருக்கிறோம்…
ரஞ்சித் பட்டறையில் இருந்து சமூக அரசியல் சினிமாக்கள் தொடந்து வருகின்றன. தேவையும் கூட. ஆனால், அவை கதையாகவும், திரையாகவும் முழுமை பெற்றால் தான் அந்தப் பட்டறையின் நோக்கம் முழுமை பெறும். அல்லது இந்த வசனங்களையும் கருத்துகளையும் தமிழகத்தில் எளிதில் கடந்து செல்லப்படும்… அப்படித்தான் பல முக்கியமான வசனங்கள் தேவையே இல்லாமல் வருகின்றன. கடந்து செல்லப்படுகின்றன…
இது நம்மைவிட அவர்களுக்கு நன்றாகவே தெரியும். விரைவில் அப்படியான ஒரு படத்தை எதிர்பார்ப்போம்… குண்டு பெயரில் உள்ள பிரமிப்பு படத்தில் இல்லாதது ஒரு பெரிய ஏமாற்றமே…
சினிமா
எனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…
சின்ன வயதில் விட்டுப்போன அண்ணனை தேடிப் போகிறார் தம்பி. போன இடத்தில் போலீசில் உயர்பதவியில் இருக்கும் அண்ணனுக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. அந்தச் சிக்கல்களை எல்லாம் மீட்டு அண்ணனை நல்லவன் என நிரூபிக்கிறார் தம்பி. அண்ணனுக்கு என்ன சிக்கல்… அவர் என்ன ஆனார் என்பது தான் எனை நோக்கி பாயும் தோட்டா…
தன் கல்லூரிக்கு சினிமா சூட்டிங்கிற்காக வரும் கதாநாயகியை பார்த்ததும் காதல் கொள்கிறார் தனுஷ். பார்வையிலேயே பேசிக்கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு ஒருநாள் அந்தப் படத்தில் கதாநாயகி விருப்பமில்லாமல்தான் நடிக்கிறார் என்பதை தெரிந்துகொள்கிறார். அதை தொடர்ந்து அவருக்கு இருக்கும் பல்வேறு சிக்கல்களை தீர்த்து நாயகியை கரம் பிடிக்கிறார் நாயகன்…
திகட்ட… திகட்ட காதல்… திடீரென காதலி விட்டுப்போக நான்கு ஆண்டுகள் கழித்து அவரிடம் இருந்து ஒரு போன்… தான் மிகப்பெரிய சிக்கலில் இருப்பதாக. வந்து காப்பாற்றச் சொல்கிறார். காப்பாற்ற செல்லும் நாயகன் அவரை எப்படி மீட்டார் என்ன ஆனது என்பதை சொல்லும் படம் தான் எனை நோக்கிப் பாயும் தோட்டா…
என்னடா கதையே இல்லாம படம் எடுக்கும் காலத்தில் இவ்ளோ கதைகளோட ஒரு படமா என்று ஆச்சர்யமாக இருக்கிறது. அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ரெண்டு நாளா யோசிச்சு எது கதையா இருக்கும் என்ற குழப்பத்தில் நானா ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு இன்னும் எத்தனை கதைகள் தெரிந்தாலும் கீழே சொல்லுங்கள்.
ஒன்றரை ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கிறது… எனை நோக்கி பாயும் தோட்டா… விஜய் சேதுபதி மாதிரி ஆண்டுக்கு 5 படங்கள் தனுசுக்கும் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரி தன்னுடைய நடிப்பை கதைக்கு ஏற்றார் போல கொடுக்கிறார் தனுஷ். எனை நோக்கி பாயும் தோட்டாவிலும் அப்படியே செய்திருக்கிறார்.
இது ஒரு கௌதம் வாசுதேவ் மேனன் படம்… நாயகன் அழகாக இருப்பார்… நாயகி அவரை விட அழகியாக இருப்பார்… எல்லோரும் நடித்து கதை நமக்கு புரிய வைத்தாலும் ஒருவர் கதை சொல்லிக்கொண்டே இருப்பார். ஸ்டைலாக பேசுவார்கள் வீட்டு வேலை பார்ப்பவர்கள் கூட… அழகான இடங்களாக இருக்கும். அதுவும் நம்ம ஊரிலேயே இருக்கும்… இசை செம்மையாக இருக்கும்… பாடல்களும் அப்படியே இருக்கும்… சண்டை காட்சிகள் செம்ம ரிச்சாக இருக்கும்… ஒரு கதாபாத்திரம் வரும்… உடனே செத்துவிடும்… படம் முடிந்த பின் கிளைமாக்ஸ் சொல்லப்படும்… காதல்… கதலோ காதலாக இருக்கும்… அப்படி ஒருமுறை காதல் செய்துவிட வேண்டும் என படம் பார்க்கும் எல்லோருக்கும் தோன்றும்… பேசுபவர்கள் எல்லோரும் பேஸ் வாய்சில் பேசுவார்கள்… வில்லன் மிரட்டி எடுப்பார்… இது எல்லாம் அப்படியே இருக்கிறது…
மேகா ஆகாஷ் அழகா இருக்கிறார்… முதல்படம்… இன்னும் அவரிடம் நிறைய எதிர்பார்த்துள்ளது இந்த தமிழ்சினிமா… சசிக்குமார் கொஞ்ச நேரமே வருகிறார். ஆனால், அவரது கதாபாத்திரம் படம் முழுவதும் வருவதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார். படத்தின் மற்றொரு பலம் இசை… மிஸ்டர் எக்ஸ் என முன்னரே வெற்றி பெற்றாலும் பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார்.
தனுஷ்… கௌதம் மேனன் இணைந்ததுமே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. தடை மேல் தடை இயல்பாகவே இந்தப் படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு ஏறிவிட்டது. ஆனால் அதை எல்லாம் இந்தப் படம் தாங்கிக்கொண்டு நின்றதா என்றால் இல்லை என்பதுதான் பதில்… ஆனால், அதற்கு கௌதமோ தனுசோ ஒன்றும் செய்ய முடியாது…
எப்படியே இருந்தாலும் முதல் பாதி ஓரளவு பொறுத்துக்கொண்டு பார்க்க முடிந்ததாகவே இருந்தது. டெக்னிக்கலாக வழக்கம்போல இதுவும் நல்ல படம்தான். படத்தின் பெரும்பாலான நேரம் என்ன சொல்ல வருகிறார்கள் என்ற குழப்பத்துடனே படம் பார்க்க முடிந்தது.
இரண்டாம் பாதிதான் படம் என்ன சொல்ல வருகிறது… எங்கு செல்கிறது… எப்போது முடியப் போகிறது… இரண்டாம் பாகத்தில் சொல்லப்போகிறோம் என சொல்லிவிடுவார்களோ என பல குழப்பத்தை பாக்குறவங்களுக்கு கொடுக்கிறது. பல சிரமங்களுக்கு இடையே படம் இயக்கி, தயாரித்து வெளியில் கொண்டுவரும் கௌதம் வாசுதேவ் மேனன் கொஞ்சம் திரைக்கதைக்கும் சிரமப்பட்டால் அடுத்தடுத்த படங்களில் தன் ரசிகர்களை தன் வசம் வைத்துகொள்வார் கௌதம். அப்படி இல்லை என்றால் கொஞ்சம் சிரமம் தான். அடுத்தடுத்து வரும் தோட்டாக்கள் எப்படி இருக்கின்றன என பொறுத்திருந்து பார்க்கலாம்…
சினிமா
ஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…

ஆதித்ய வர்மா… வழக்கமான காதல்… வழக்கமான காதல் கதையா அல்லது இது ஏதும் ஸ்பெஷல் இருக்கிறதா என்றால் அதை தான் நீண்ட நேரமாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்…
மங்களூரு மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார் ஆதித்ய வர்மா (துருவ் விக்ரம்)… அங்கு முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியாக சேர்கிறார் மீரா… மீரா ஷெட்டி (பணிதா சாந்து)… ஆமா… அப்படித்தான் அவங்களைக் கூப்பிடணும்… அவங்களும் அப்படித்தான் சொல்லுவாங்க… மீராவை பார்த்ததும் அதித்யாவுக்கு காதல் வருகிறது. முதல் நாளே முத்தமிடுகிறான். அவளும் ஏற்றுக்கொள்கிறாள். அடுத்தநாளில் இருந்து இருவரும் திகட்ட திகட்ட காதலிக்கிறார்கள்… இந்த திகட்டாத காதல் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் ஆதித்ய வர்மாவின் மீதிக் கதை… (கதை புதுசு மாதிரி இருக்குல…)
ஏற்கனவே பாலாவால் வர்மா என்ற பெயரில் உருவாக்கப்பட்டு, படம் முடிவடைந்த நிலையில், அதில் திருப்தி இல்லாததால் அந்தப் படம் கைவிடப்பட்டது. பிறகு, அர்ஜுன் ரெட்டியை இயக்கிய சந்தீப் வாங்காவிடம் துணை இயக்குனராகப் பணியாற்றிய கிரீஷாயாவை இயக்குநராக வைத்து மீண்டும் எடுக்கப்பட்டிருக்கிறது ஆதித்ய வர்மா…
2017ம் ஆண்டு அர்ஜூன் ரெட்டியாக தெலுங்குவில் வெளியாகி பெரும்பாலும் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் தற்போது தமிழில் அப்படியே வெளியாகி இருக்கிறது. அதில் அர்ஜூன் இதய அறுவைச்சிகிச்சை மருத்துவர்… இதில் ஆதித்யா எழும்பு முறிவு மருத்துவர்… இந்த மருவை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை…
பார்த்ததும் காதல்… விரும்பம் இன்றி பெண்ணை நெருங்குவது… அவரது உணர்வுகள், உணர்ச்சிகள் என எதற்கும் இடம் கொடுக்காமல் தன்னுடைய உணர்வுகள், உணர்ச்சிகள் என்று இருப்பது, முட்டாள் தனமான கோவம், எதையும் நின்று நிதானமாக யோசிக்காத ஒருவன், எப்போதும் குடி, பெண்கள் தொடர்பு, போதை பொருட்கள் என எடுத்துக்கொள்பவன். ஆனால், நன்றாக படிப்பவன், அழகாக இருக்கிறான், நிறைய பணம் வைத்திருப்பவன். இப்படி ஒரு கதாபாத்திரம் எப்படி சாத்தியம். அதை ஒரு பெண் ஏற்றுக்கொண்டு முழுவதும் அவனை சார்ந்தே இருப்பதாக அடி வாங்கிக் கொண்டு… முத்தம் மட்டும் கொடுத்துக்கொண்டு, தன்னுடைய சூழலை விளக்க ஆறு மணி நேரம் மட்டுமே கொடுக்கும் ஒருவனுடைய குழந்தையை திருமணத்திற்கு முன்னரே சுமக்கும் ஒரு பெண்ணும் எப்படி சாத்தியம் என்ற மிகப்பெரிய கேள்வி அர்ஜூன் ரெட்டி படத்தைப் பற்றி என்னிடம் யார் எப்போது பேசினாலும் எனக்கு இருக்கும்… அதே கேள்வி இந்தப் படத்தைப் பார்க்கும்போது வந்தது. அதே கதை தானே இதுவும்…
ஒருவேளை 20, 21ம் நூற்றாண்டுகளின் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இந்தக் கேள்விக்கு விடை தெரியுமோ என்னமோ… வயது ஆகிவிட்டது.
படமாக முதல் பாதி ஓரளவு பொறுத்துக்கொண்டு பார்க்கலாம். ஆனால், இரண்டாம் பாதி மிகப்பெரிய இழுவை… முழுவதும் மது பாட்டில்கள்தான். சிரமங்களுக்கு இடையேதான் பார்க்க வேண்டி இருக்கிறது. சிலர் இடையிலே எழுந்தும் போனார்கள்… பாவம் 70களின் குழந்தைகளாக இருப்பார்கள் போல… நான் 80ன் குழந்தை என்பதால் கொஞ்சம் பொறுத்துகொள்ள முடிந்ததோ இல்லையோ…
துருவ் விக்ரம்… துரு… துரு… என இருக்கிறார்… சினிமா ரசிகர்களுக்கு குறிப்பாக ரசிகைகளுக்கு ஒரு நல்ல வரவுதான். நடிப்பிலும் உண்மையில் நன்றாக நடித்திருக்கிறார். குரல், நடை, உடல் பாவனையில் சில இடங்களில் விக்ரமை ஞாபகம் படுத்துகிறார்.
பணிதா சாந்து வடக்கே இருந்து மற்றொரு அழகான இறக்குமதி… வருகிறார்… அழுகிறார்… முத்தம் கொடுக்கிறார்… கற்பமாகிறார்… கடைசியில்… (நோ அது சஸ்பென்ஸ்)… 20 வருடங்கள் கழித்து கடலோரக் கவிதைகள் ராஜா மீண்டும் சினிமாவில் எண்ட்ரி ஆகியிருக்கிறார்…
ஸ்மைல் சேட்டையின் அன்பு தாசன்… அதித்யாவின் நண்பராக வருகிறார்… அவரது சில கமெண்ட்ஸ் சிரிப்பை வரவழைக்கிறது. நன்றாகவும் நடித்துள்ளார். வேறு யாரையும் பெரிதாக சொல்லிக்கொள்ள முடியவில்லை…
பாடல்களைவிட பின்னணி இசை நன்றாகவே இருக்கிறது. அதுவும் நாய் சத்தமாக குறைந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு பின்னணி இசை நாயகனுக்கு கொடுத்திருக்கிறார் ரத்தான்… கேட்க நன்றாக இருந்தது…
நிறைய ஆங்கில வசனங்கள்… நலன் குமாரசாமி வேறு எழுதியிருக்கிறார். அதிகமான பண வாடை… எதார்த்தத்திற்கு சற்றும் பொறுந்தாத குடும்ப வாழ்க்கை மற்றும் அவர்களின் வாழ்க்கை… அங்கும் ஜாதிய வேறுபாடு… என இருக்கும் இந்தக் கதை வேண்டுமானால் இதே வாழ்க்கை வாழும் .1% மக்களுக்குக்கும் .1% 20களின் குழந்தைகளுக்கும் பிடிக்கலாம்… மற்ற 99.98% மக்களுக்கு… கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டும்…
எதிர்காலம் இருக்கிறது… துருவ்… காத்திருக்கிறோம் இன்னும் கொண்டாட…
-
தினபலன்2 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (09/12/2019)
-
சினிமா செய்திகள்3 days ago
பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா!
-
தினபலன்3 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (08/12/2019)
-
தினபலன்21 hours ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (10/12/2019)